விவசாய நிலங்களில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்
தேன்கனிக்கோட்டை அருகே விவசாய நிலங்களில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன. பயிர்கள் சேதமானதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே விவசாய நிலங்களில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன. பயிர்கள் சேதமானதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
யானைகள் அட்டகாசம்
தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு வெளியேறிய 6 காட்டு யானைகள் வனப்பகுதியையொட்டி உள்ள லக்கச்சந்திரம் கிராமத்திற்குள் புகுந்துள்ளன. பின்னர் அந்த யானைகள் லக்கச்சந்திரம் கிராமத்தில் விவசாய நிலங்களில் பயிரிட்டிருந்த தக்காளி, பீன்ஸ், முட்டைக்கோஸ், காலிபிளவர் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை கால்களால் மிதித்தும் தின்றும் அட்டகாசம் செய்தன.
மேலும் விவசாய நிலத்தில் இருந்த தென்னை, வாழை மரங்களை வேரோடு சாய்த்து விட்டு மீண்டும் வனப்பகுதிக்கு சென்று விட்டன. இதனிடையே நேற்று காலை தோட்டத்திற்கு சென்ற விவசாயிகள் பயிர்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் தேன்கனிக்கோட்டை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இழப்பீடு
அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று காட்டு யானைகளால் சேதமான பயிர்களை பார்வையிட்டனர். அப்போது காட்டு யானைகளால் சேதமடைந்த பயிர்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இந்த யானைகள் கூட்டத்தை கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும். யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் வனப்பகுதிக்கு சென்று யானைகளை விரட்ட நடவடிக்கை மேற்கொண்டனர். லக்கச்சந்திரம் கிராமத்திற்குள் காட்டு யானைகள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.