ரங்கசந்திரம் கிராமத்திற்குள் சுற்றித்திரியும் யானைகள்
தேன்கனிக்கோட்டை அருகே ரங்கசந்திரம் கிராமத்திற்குள் 3 யானைகள் சுற்றித்திரிவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே ரங்கசந்திரம் கிராமத்திற்குள் 3 யானைகள் சுற்றித்திரிவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
யானைகள் அட்டகாசம்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள நொகனூர் காப்புக்காட்டில் 7 யானைகள் முகாமிட்டு உள்ளன. இந்த யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதிகளில் இருந்து வெளியேறி கிராமங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்து வருகின்றன. இந்தநிலையில் நொகனூர் காப்புக்காட்டில் இருந்து வெளியேறிய 3 யானைகள் நேற்று தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ரங்கசந்திரம் கிராமத்திற்குள் புகுந்தன. விளை நிலங்களில் யானைகள் சுற்றித்திரிவதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் தேன்கனிக்கோட்டை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை
அதன்பேரில் வனச்சரகர் முருகேசன் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் விரைந்து சென்று பட்டாசுகள் வெடித்து யானைகளை நொகனூர் வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு 3 யானைகளும் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றன. இந்த யானைகளின் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
கிராமத்தையொட்டி உள்ள வனப்பகுதியில் யானைகள் சுற்றித்திரிவதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பகல் நேரங்களில் விளை நிலங்களில் வேலை செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். இரவில் விவசாய நிலங்களுக்கு காவலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று ஒலிபெருக்கி மூலம் வனத்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். ரங்கசந்திரம் கிராமத்தில் யானைகள் சுற்றித்திரிவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.