குட்டையில் உற்சாக குளியல் போட்ட யானைகள்
தளி அருகே குட்டையில் யானைகள் உற்சாக குளியல் போட்டன. இவற்றை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
தளி அருகே குட்டையில் யானைகள் உற்சாக குளியல் போட்டன. இவற்றை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
யானைகள் முகாம்
கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 150-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம், கூட்டமாக உணவு மற்றும் தண்ணீரை தேடி கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி வனப்பகுதிக்கு வருவது வழக்கம். அந்த யானைகள் தமிழக எல்லையான ஜவளகிரி மற்றும் தளி வனப்பகுதியில் இடம்பெயரும்.
இந்த ஆண்டுக்கான இடம் பெயர்வு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இதுவரை மொத்தம் 70-க்கும் மேற்பட்ட யானைகள் இடம் பெயர்ந்து ஜவளகிரி வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன. அவை பல்வேறு குழுக்களாக பிரிந்து வனப்பகுதியில் சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த யானைகளின் நடமாட்டத்தை டிரோன் கேமரா மூலம் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
உற்சாக குளியல்
இந்த நிலையில் தளி அருகே சிக்கனநாயக்கன் கிராமத்தில் உள்ள குட்டையில் 10-க்கும் மேற்பட்ட யானைகள் உற்சாகமாக குளித்து கொண்டு இருப்பது டிரோன் கேமராவில் தெரியவந்தது. இதையடுத்து ஜவளகிரி வனச்சரகர் சுகுமாரன் தலைமையிலான வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்தனர்.
தொடர்ந்து இந்த யானைகளை நொகனூர் மற்றும் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வனப்பகுதியையொட்டி உள்ள பொதுமக்கள் விறகு சேகரிக்கவோ, ஆடு, மாடு மேய்க்கவோ வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.