விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்திய யானைகள்
தேன்கனிக்கோட்டை அருகே விளைநிலங்களில் யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தின.
தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டை அருகே விளைநிலங்களில் யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தின.
யானைகள் அட்டகாசம்
கர்நாடகா மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து 15-க்கும் மேற்பட்ட யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஜவளகிரி வனப்பகுதி வழியாக தேன்கனிக்கோட்டை அருகே உள்ள குந்துக்கோட்டை வனப்பகுதிக்கு வந்தன. இந்த பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள் இரவு நேரங்களில் வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்து வந்தன.
இந்தநிலையில் நேற்று காலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள் ஒட்டர்பாளையம், மணியம்பாடி, பிக்கனப்பள்ளி, ஆலள்ளி, கோலட்டி, ஒம்மண்டப்பள்ளி, பேலாளம், சாலிவரம் ஆகிய கிராமங்களில் புகுந்து நிலங்களில் பயிரிடப்பட்டு இருந்த ராகி, தக்காளி, முட்டைகோஸ் போன்ற பயிர்களை சேதப்படுத்தின. இதுகுறித்து விவசாயிகள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அறிவுறுத்தல்
அதன்பேரில் தேன்கனிக்கோட்டை வனச்சரகர் முருகேசன் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் பட்டாசு வெடித்து யானைகளை நொகனூர் வனப்பகுதிக்குள் விரட்டினர். யானைகளால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
வனப்பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளதால் கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், இரவு நேரங்களில் வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் அறிவுறுத்தினர். மேலும் யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.