கிராமத்திற்குள் புகுந்த யானைகள்
தேன்கனிக்கோட்டை அருகே ஏணி முச்சந்திரம் கிராமத்திற்குள் புகுந்த 10 யானைகளை வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து நொகனூர் வனப்பகுதிக்கு விரட்டினர்.
தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டை அருகே ஏணி முச்சந்திரம் கிராமத்திற்குள் புகுந்த 10 யானைகளை வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து நொகனூர் வனப்பகுதிக்கு விரட்டினர்.
யானைகள் முகாம்
கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட யானைகள் வெளியேறின. இந்த யானைகள் தமிழக வனப்பகுதியான கிருஷ்ணகிரி மாவட்டம் ஜவளகிரி, தளி, நொகனூர், தேன்கனிக்கோட்டை, ஊடேதுர்க்கம் மற்றும் ஓசூர் ஆகிய வனப்பகுதிகளில் முகாமிட்டு உள்ளன. இந்த யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சுற்றித்திரிகின்றன.
இந்த நிலையில் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள ஆலஅள்ளி வனப்பகுதியில் 10-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் இரவு நேரங்களில் அருகில் உள்ள கிராம பகுதிகளுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள் அருகில் உள்ள ஏணி முச்சந்திரம் கிராமத்திற்குள் புகுந்தன.
பட்டாசு வெடித்து விரட்டினர்
இந்த யானைகள் விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தின. மேலும் அங்குள்ள தோட்டத்தில் அமைக்கப்பட்டு இருந்த சோலார் மின்வேலிகளையும் யானைகள் உடைத்து சேதப்படுத்தின. இதை கண்டு விவசாயிகள் கவலை அடைந்தனர். இதுகுறித்து விவசாயிகள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் தேன்கனிக்கோட்டை வனச்சரகர் முருகேசன் தலைமையிலான வனத்துறை மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் விரைந்து சென்று டார்ச் விளக்குகளை அடித்தும், பட்டாசுகள் வெடித்தும் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு யானைகளை நொகனூர் வனப்பகுதிக்கு வனத்துறையினர் விரட்டினர். இதனால் கிராம மக்கள், விவசாயிகள் நிம்மதி அடைந்தனர்.