சானமாவு காட்டிற்கு வந்த 50 யானைகள்
உத்தனப்பள்ளி அருகே உள்ள சானமாவு காட்டிற்கு 50 யானைகள் வந்தன.
ராயக்கோட்டை
கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து வந்த 50 யானைகள் ராயக்கோட்டை அருகே ஊடேதுர்க்கம் காட்டில் முகாமிட்டு இருந்தன. அவை நேற்று அதிகாலை காட்டில் இருந்து வெளியேறி, உத்தனப்பள்ளி அருகே உள்ள சானமாவு காட்டிற்கு வந்தன. அந்த காட்டில் ஏற்கனவே 3 யானைகள் உள்ள நிலையில், இந்த 50 யானைகளுடன் அவை சேர்ந்து கொண்டன. இந்த யானைகள் சானமாவு காப்புக்காட்டில் பாலேகொண்டா ஏரி பகுதியில் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் ஏரியில் தண்ணீர் குடித்தும், ஆனந்த குளியல் போட்டும் வருகின்றன.
இந்த யானைகள் எந்த நேரமும் ஓசூர்-ராயக்கோட்டை சாலையை கடந்து போடூர் பள்ளம் வனப்பகுதிக்குள் வரலாம் என்பதால் வனத்துறையினர் உஷார் நிலையில் உள்ளனர். மேலும் யானைகள் இரவு நேரத்தில் அருகில் உள்ள ராமாபுரம், பீர்ஜேப்பள்ளி, பாத்தகோட்டா உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லலாம் என்பதால் யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். விவசாயிகள் இரவு நேரங்களில் நிலங்களில் காவலுக்கு இருக்க வேண்டாம் என்றும், யானைகள் நடமாட்டம் குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.