பயிர்களை சேதப்படுத்திய யானைகள்
ஓசூர் அருகே விவசாய நிலங்களில் புகுந்து யானைகள் பயிர்களை சேதப்படுத்தின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
ஓசூர்
ஓசூர் அருகே விவசாய நிலங்களில் புகுந்து யானைகள் பயிர்களை சேதப்படுத்தின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
யானைகள் அட்டகாசம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் 60 யானைகள் முகாமிட்டுள்ளன. இதில், 40 யானைகள் ஒரு குழுவாகவும், 20 யானைகள் மற்றொரு பிரிவாகவும் பிரிந்து வனப்பகுதியில் சுற்றித்திரிகின்றன. மேலும் இந்த யானைகள் வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சானமாவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 20 யானைகள், அருகிலுள்ள பென்னிக்கல் கிராமத்திற்குள் புகுந்தன. இந்த யானைகள் அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பீன்ஸ், தக்காளி உள்ளிட்ட பயிர்களை தின்றும், கால்களால் மிதித்து சேதப்படுத்தின. பின்னர் யானைகள் வனப்பகுதிக்கு சென்று விட்டன.
விவசாயிகள் கவலை
இதனிடையே நேற்று காலை விவசாயிகள் நிலத்திற்கு சென்றபோது யானைகள் பயிர்களை சேதப்படுத்தியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். விவசாய நிலங்களில் புகுந்து யானைகள் பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து யானைகளால் சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டனர்.
அப்போது யானைகள் கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும். சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள், கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.