காவேரிப்பட்டணம்- காரிமங்கலம் இடையேசஞ்சீவிராயன் மலைப்பகுதியில் 2 காட்டு யானைகள் முகாம்வனத்துறையினர் கண்காணிப்பு
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் - காரிமங்கலம் இடையே சஞ்சீவிராயன் மலைப்பகுதியில் 2-வது நாளாக 2 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.
யானைகள் முகாம்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள ஜெதாப், சப்பாணிப்பட்டி, சவுளூர் பகுதிகளுக்கு வந்த 2 காட்டு யானைகள் அங்குள்ள ஏரிகளில் குளித்தன.
பின்னர் தேசிய நெடுஞ்சாலையில் இந்த யானைகள் முகாமிட்டு சுற்றித்திரிந்தன. இதையடுத்து காவேரிப்பட்டணம்- காரிமங்கலம் அருகே உள்ள சஞ்சீவிராயன் மலைப்பகுதிக்கு அவை சென்றன. அங்கு கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை, பாலக்கோடு உள்ளிட்ட 3 வனச்சரகர்கள் தலைமையில் 30 வன ஊழியர்கள் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
எச்சரிக்கை
2-வது நாளாக அங்கு முகாமிட்டுள்ள யானைகள் இரவில், மலையையொட்டி உள்ள நிலத்தில் இருந்த தீவனபுல்களை தின்றும், காலால் மிதித்தும் சேதப்படுத்தின. மலையில் உள்ள யானைகள் அங்கிருந்து இடம் பெயரவுள்ள திசையை பொறுத்து, பஞ்சப்பள்ளி அல்லது ஊடேதுர்க்கம் வனத்திற்கு விரட்டிட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். மேலும் சுற்றுவட்டார கிராம மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.