தக்காளி தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம்
வேப்பனப்பள்ளி அருகே தக்காளி தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வேப்பனப்பள்ளி
வேப்பனப்பள்ளி அருகே தக்காளி தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
யானைகள் அட்டகாசம்
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே தமிழக எல்லையான எப்ரி மற்றும் நேரலகிரி வனப்பகுதிகளில் 7 காட்டு யானைகள் முகமிட்டுள்ளன. இந்த யானைகள் வனப்பகுதிகளில் இருந்து வெளியேறி அருகில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்து வருகின்றன.
இந்தநிலையில் எப்ரி மற்றும் நேரலகிரி வனப்பகுதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு யானைகள் வெளியேறின. பின்னர் வனப்பகுதியையொட்டி உள்ள கடேகவுண்டனூர் கிராமத்திற்குள் 7 யானைகளும் புகுந்தன. அந்த யானைகள் முனியப்பன் என்பவரது தக்காளி தோட்டம் மற்றும் அதேபகுதியில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தின.
விரட்டும் பணி தீவிரம்
இதனிடையே நேற்று காலை முனியப்பன் மற்றும் விவசாயிகள் தோட்டத்திற்கு சென்றபோது தக்காளி செடிகளை யானைகள் மிதித்து சேதப்படுத்தி இருப்பதை கண்டு கவலை அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் விரைந்து சென்று அந்த பகுதியில் முகாமிட்டுள்ள 7 யானைகளையும் வேறு வனப்பகுதிக்கு விரட்டும் பணிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
காட்டு யானைகள் மீண்டும் ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். யானைகளால் சேதமடைந்த தக்காளிக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். யானைகளை அங்கிருந்து விரட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையொட்டி கிராம மக்கள் இரவு நேரங்களில் வனப்பகுதிக்கு செல்லவேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தினர்.