சமையலர் பணிக்கு தகுதியுடைய மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் விண்ணப்பிக்கலாம்


சமையலர் பணிக்கு தகுதியுடைய மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் விண்ணப்பிக்கலாம்
x

முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் சமையலர் பணிக்கு தகுதியுடைய மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

தமிழக முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் அடுத்த மாதம் (ஜூன்) முதல் ஊரக மற்றும் பேரூராட்சிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு செயல்படுத்தப்படவுள்ளது. முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தில் பெரம்பலூா் மாவட்டத்தில் சமையலராக தேர்வு செய்யப்படவுள்ள மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கீழ்க்கண்ட தகுதிகளை கொண்டிருக்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவமுள்ள சுய உதவிக்குழு, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, பகுதி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினராக இருத்தல் வேண்டும். சமையலர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர் அதே பகுதியில் வசிப்பிடமாக கொண்டு வசிப்பவராக இருக்க வேண்டும். இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினரின் குழந்தை அதே பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிப்பவராக இருத்தல் வேண்டும். மேலும், குழந்தை படிப்பு முடித்து வேறு பள்ளிக்கு (அல்லது) 6-ம் வகுப்பிற்கு மேல் உள்ள வகுப்பிற்கு மாறும் பொழுது சமையலர் பணியில் ஈடுபட்டிருப்பவர் மாற்றப்பட்டு தகுதியான வேறு நபர் நியமிக்கப்படுவார். காலை உணவை சமைப்பதற்கும் பரிமாறுவதற்கும் தேர்வு செய்யப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உணவு தயாரிப்பதில் போதுமான முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 10-ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். மலைப்பாங்கான பகுதிகள் மற்றும் பழங்குடியின கிராமங்களில் 10-ம் வகுப்பு வரை பயின்ற மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் இல்லையெனில் 8-ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். சமையலர் பணிக்கு தேர்வு செய்யப்படும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தங்கள் பெயரில் இணைய வசதியுடன் கூடிய ஆண்ட்ராய்டு செல்போன் வைத்திருப்பதோடு அதை உபயோகப்படுத்த தெரிந்திருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்கும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் கடந்த 3 ஆண்டுகளில் பெற்ற கடன்களை தவணை தவறாது நிலுவையின்றி செலுத்தியிருப்பவராக இருக்க வேண்டும். இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் உறுப்பினர் சார்ந்துள்ள மகளிர் சுய உதவிக்குழு, காலை உணவு திட்டத்தை செயல்படுத்துவதற்கு போதுமான நிதி மூலதனத்தை கொண்டிருக்க வேண்டும். இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான உறுப்பினர்களின் விருப்பம் மற்றும் அது தொடர்பான தீர்மானத்தை தீர்மான பதிவேட்டில் பதிவு செய்திருக்க வேண்டும். மேற்கண்ட தகுதிகளின் அடிப்படையில் மட்டுமே ஊராட்சி அளவிலான தேர்வுக்குழுவால் சமையலர் பணி நியமனம் செய்யப்படும். மேற்படி, சமையலர் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடைய மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட ஊராட்சி அளவிலான குழுவிடம் வருகிற 23-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம், என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story