கருமுட்டை விற்பனை விவகாரம்: சிறுமியின் தாயார் உள்பட 4 பேரை விசாரிக்க மருத்துவக்குழுவுக்கு அனுமதி


கருமுட்டை விற்பனை விவகாரம்: சிறுமியின் தாயார் உள்பட 4 பேரை விசாரிக்க மருத்துவக்குழுவுக்கு அனுமதி
x

கருமுட்டை விற்பனை விவகாரம் தொடர்பாக சிறுமியின் தாயார் உள்பட 4 பேரிடம் மருத்துவக்குழுவினர் விசாரணை நடத்த அனுமதி அளித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

ஈரோடு

கருமுட்டை விற்பனை விவகாரம் தொடர்பாக சிறுமியின் தாயார் உள்பட 4 பேரிடம் மருத்துவக்குழுவினர் விசாரணை நடத்த அனுமதி அளித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

கருமுட்டை விற்பனை

ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்திய கருமுட்டை விற்பனை விவகாரம் தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில், ஈரோடு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி தலைமையிலான போலீசார் பல்வேறு கோணங்களில் புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே நேரம் தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக தலைவர் டாக்டர் விஸ்வநாதன் தலைமையிலான மருத்துவக்குழுவும் பல கட்ட விசாரணை நடத்தி வருகிறது.

மருத்துவக்குழுவினர் நடத்திய விசாரணையில் ஈரோடு மட்டுமின்றி சேலம், ஓசூர், திருப்பதி, திருவனந்தபுரம் மருத்துவமனைகளிலும் சிறுமியின் கருமுட்டை விற்பனை நடந்தது தொடர்பான அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. இதனை உறுதி செய்யவும், இதுவரை மருத்துவக்குழுவினர் சேகரித்த விவரங்களை உறுதி செய்யவும் அவர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

விசாரணைக்கு அனுமதி

சிறுமியின் கருமுட்டை விற்பனை தொடர்பாக கைதுசெய்யப்பட்டு ஜெயிலில் இருக்கும் சிறுமியின் தாயார், தாயாரின் 2-வது கணவர், புரோக்கராக செயல்பட்ட மாலதி, போலி ஆதார் அட்டை வழங்கிய ஜான் ஆகிய 4 பேரை விசாரிக்க மருத்துவக்குழுவினர் ஏற்பாடு செய்து வருகிறார்கள். இதற்காக கோர்ட்டின் அனுமதி பெற, ஈரோடு மகளிர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று நீதிபதி ஆர்.மாலதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி மாலதி மருத்துவக்குழுவினர் விசாரணை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார். அதில், வருகிற 4-ந் தேதி ஒரு நாள் மட்டும் சிறுமியின் தாயார் உள்பட 4 பேரிடமும் மருத்துவக்குழு தலைவர் டாக்டர் விஸ்வநாதன் இந்த விசாரணையில் ஈடுபடலாம் என்று அனுமதி அளித்து உள்ளார். இந்த வழக்கில் அரசு வக்கீல் எம்.ஜெயந்தி ஆஜர் ஆனார்.

மேலும், இந்த வழக்கின் புகார் தாரராக இருக்கும் 16 வயது சிறுமி நேற்று முன்தினம் தற்கொலை முயற்சி செய்து கொண்டது தொடர்பாகவும், சிறுமியை வேறு இல்லத்துக்கு மாற்றம் செய்வது தொடர்பாகவும் நீதிபதி விசாரித்தார். இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் அவர் போலீசார் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.


Related Tags :
Next Story