பேரூராட்சி பகுதிகளில் வளர்ச்சி திட்டங்களுக்கு முக்கியத்துவம்-கலெக்டர் சங்கீதா தகவல்
பேரூராட்சி பகுதிகளில் வளர்ச்சி திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்று கலெக்டர் சங்கீதா கூறியுள்ளார்.
பேரூராட்சி பகுதிகளில் வளர்ச்சி திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்று கலெக்டர் சங்கீதா கூறியுள்ளார்.
ஆய்வு
வாடிப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் சங்கீதா ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக அரசு மக்கள் நலனுக்காக பல்வேறு அரசு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, பொதுமக்களின் அடிப்படை அத்தியாவசிய தேவைகளான குடிநீர், சாலை, தெருவிளக்கு வசதி போன்ற திட்டப்பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் உள்ள 9 பேரூராட்சிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ், ரூ.70 லட்சம் மதிப்பில் அலங்காநல்லூர் பேரூராட்சியில் செருவன்குளம் கண்மாய் மற்றும் சாத்தையார் ஓடை கண்மாய்கள் தூர்வாருதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ், ரூ.7 கோடியே 98 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பில் பரவை, வாடிப்பட்டி, சோழவந்தான் மற்றும் அ.வல்லாளப்பட்டி ஆகிய 4 பேரூராட்சிகளில் 4.875 கி.மீ. சாலை மற்றும் 12 கி.மீ மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளன. மூலதன மானிய நிதி திட்டத்தின்கீழ், ரூ.2 கோடி மதிப்பில் அலங்காநல்லூர், வாடிப்பட்டி, எழுமலை பேரூராட்சிகளில் 3.170 கி.மீ. சாலை மற்றும் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளன.
பூங்கா மேம்பாடு
15-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ், ரூ.92.70 லட்சத்தில் அ.வல்லாளப்பட்டி, பேரையூர், அலங்காநல்லூர், தே.கல்லுப்பட்டி, வாடிப்பட்டி பேரூராட்சிகளில் 5 குளம் மேம்பாட்டு பணிகள் நடைபெற்றுள்ளன. அ.வல்லாளப்பட்டி, பேரையூர், அலங்காநல்லூர், தே.கல்லுப்பட்டி, வாடிப்பட்டி பேரூராட்சியில் பூங்கா மேம்பாட்டு பணிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. ரூ.2 கோடியே 81 லட்சம் செலவில் 9 பேரூராட்சிகளில் 19 குடிநீர் பராமரிப்பு பணிகள் மற்றும் 9 பேரூராட்சிகளிலும் 18 பொதுசுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாடு நகர்புற சாலைகள் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.77 லட்சத்தில் எழுமலை, பேரையூர் பேரூராட்சிகளில் 2.530 கி.மீ சாலை பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. நபார்டு திட்டத்தின் கீழ், ரூ.38 லட்சத்தில் பாலமேடு பேரூராட்சியில் ஒரு கிலோ மீட்டர் சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.