மாடுகளை விவசாயத்துக்கு பயன்படுத்த வலியுறுத்திமாட்டுவண்டியில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய பட்டதாரி மணமக்கள்
திருச்செந்தூரில் மாடுகளை விவசாயத்துக்கு பயன்படுத்த வலியுறுத்தி மாட்டுவண்டியில் சென்று பட்டதாரி மணமக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே உள்ள காயாமொழி கிராமத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ். டிப்ளமோ பட்டதாரி. இவர் விவசாயம் மீது கொண்ட ஆர்வத்தால் பட்டயப்படிப்பு முடித்துவிட்டு விவசாயம் செய்து வருகிறார். இவருக்கும், காயாமொழி அருகே உள்ள செந்தாமரைவிளை பகுதியை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கலையரசிக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
இவர்களது திருமணம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் நடந்தது. இதற்காக மோகன்ராஜ் தனது ஊரில் இருந்து பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் கோவிலுக்கு சென்றார். பின்னர் திருமணம் முடித்துவிட்டு தனது மனைவி கலையரசியையும் மாட்டு வண்டியில் அழைத்துக் கொண்டு மனைவியின் ஊருக்கு புறப்பட்டார். பின்னர் அங்கிருந்து மணமக்கள் மாட்டு வண்டியில் ஊர்வலமாக மணமகன் வீட்டிற்கு சென்றனர். அப்போது, அவர்களுக்கு செண்டை மேளம், ஆட்டம் பாட்டத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து மோகன்ராஜ் கூறுகையில், 'பாரம்பரிய முறைப்படி மாட்டை வைத்து உழவு செய்து விவசாயத்தை வளர்க்க வேண்டும். விவசாயத்திற்கு எந்திரங்களை பயன்படுத்துவதால் பாரம்பரிய விவசாயம் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். அதுபோல் விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்ட கால்நடைகளும் அழிந்து வருகின்றன. எனவே மாடுகளை விவசாயத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு மாட்டுவண்டியில் ஊர்வலமாக சென்றோம்' என்று தெரிவித்தார்.