20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி; தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உண்ணாவிரதம்


20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி; தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உண்ணாவிரதம்
x

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது.

சென்னை,

பழைய ஓய்வூதிய திட்டத்தினை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு சமவேலை சம ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது.

இந்த உண்ணாவிரதத்துக்கு மாநில தலைவர் மு.லட்சுமிநாராயணன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ந.ரெங்கராஜன் முன்னிலை வகித்தார். இதில் நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் த.அமிர்தகுமார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத்தலைவர் சு.தமிழ்ச்செல்வி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஓய்வு பிரிவு பொதுச்செயலாளர் இரா.ஆறுமுகம், முன்னாள் மாநிலத் தலைவர் அ.சுதாகரன், மாநிலப் பொருளாளர் வில்சன் பெர்ணபாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அடுத்தகட்ட போராட்டம்

போராட்டத்தில் பங்கேற்றவர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தினை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு உடனே அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் ரெங்கராஜன் கூறும்போது, 'இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே வட்டம், மாவட்டம் அளவில் 3 கட்டங்களாக போராட்டம் நடத்திவிட்டோம். ஆனால் தமிழ்நாடு அரசு கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை. தற்போது 4-வது கட்டமாக இந்த உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்கிறோம். இதற்கும் தீர்வு கிடைக்கவில்லையென்றால், செயற்குழு, பொதுக்குழு கூடி, அடுத்தகட்ட போராட்டத்தை முன்னெடுப்போம்' என்றார்.


Next Story