சேலத்தில் பிரபல நகைக்கடையில் ரூ.40 லட்சம் நகைகளை திருடிய ஊழியர் கைது-ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததாக வாக்குமூலம்
சேலத்தில் பிரபல நகைக்கடையில் ரூ.40 லட்சம் மதிப்பிலான நகைகளை திருடிய ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
பிரபல நகைக்கடை
சேலம் புதிய பஸ்நிலையம் பகுதியில் செயல்படும் பிரபல நகைக்கடை ஒன்றில் சமீபத்தில் நகைகளை கணக்கீடும் பணி நடைபெற்றது. அப்போது 85 பவுன் நகைகள் குறைவாக காணப்பட்டது. இதன் மதிப்பு ரூ.40 லட்சம் என்று கூறப்படுகிறது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த நிர்வாகிகள் இதுதொடர்பாக ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது நகைக்கடையில் கடந்த 13 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய பொன்னம்மாபேட்டை அண்ணாநகரை சேர்ந்த தீபக் (வயது 29) என்பவர் நகைகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
ஆன்லைன் சூதாட்டம்
இதுதொடர்பாக நகைக்கடை பொதுமேலாளர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து, தீபக்கை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் போலீசாரிடம் அவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, கடந்த 5 மாதங்களாக தீபக் நகைக்கடையில் இருந்து தினமும் சிறிது, சிறிதாக நகையை திருடி வந்துள்ளார். பின்னர் அந்த நகைகளை தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்தும், மற்ற நகைக்கடைகளில் விற்றும் உள்ளார். இதையடுத்து அதில் கிடைத்த பணத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் முதலீடு செய்து இழந்துள்ளார் என்று தெரிவித்தனர். தொடர்ந்து தீபக்கிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.