மின்வாரிய அலுவலகத்தில் புகுந்து ஊழியர் சரமாரி வெட்டிக்கொலை
மின்வாரிய அலுவலகத்தில் புகுந்து ஊழியரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி,
நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தபாண்டி (வயது 51). இவர் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் வைத்திலிங்கபுரம் துணை மின் நிலையத்தில் லைன்மேனாக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி ராமலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
நேற்று முன்தினம் வழக்கம்போல் இரவு பணிக்காக ஆனந்தபாண்டி துணை மின் நிலையத்துக்கு சென்றார். பின்னர் அவர், மெயின் கேட்டை பூட்டி விட்டு, மின்வாரிய அலுவலகத்தில் தனியாக பணியாற்றினார்.
சரமாரி வெட்டிக்கொலை
நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள், மின்வாரிய அலுவலகத்துக்குள் புகுந்து ஆனந்த பாண்டியை சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர். நேற்று காலையில் துணை மின்நிலையத்துக்கு பணிக்கு சென்ற ஊழியர்கள் ஆனந்த பாண்டி உடல் முழுவதும் பலத்த வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கும், நாசரேத் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்த பாண்டியை கொலை செய்த கும்பல் யார்? எதற்காக கொலை செய்தனர்? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.