மின்சாரம் தாக்கி ஊழியர் சாவு
திருவாரூர் அருகே தெரு விளக்கை சரி செய்ய முயன்ற போது மின்சாரம் தாக்கி ஊழியர் உயிரிழந்தார்.
திருவாரூரை அடுத்த அலிவலத்தை சேர்ந்தவர் சிதம்பரம். இவரது மகன் ஞானபிரகாஷ் (வயது 28). இவர் தஞ்சை மாவட்டம் மாரியம்மன் கோவில் மின் வாரியத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சொந்த ஊரான அலிவலத்திற்கு வந்து செல்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் ஞானபிரகாஷ் சொந்த ஊருக்கு வந்திருந்தார். அப்போது அங்கு சமத்துவபுரம் பகுதியில் உள்ள தெரு விளக்கு எரியவில்லை.
மின்சாரம் தாக்கி சாவு
இதனையடுத்து ஞானபிரகாஷ், மின் கம்பத்தில் ஏறி அந்த மின்விளக்கை சரி செய்ய முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஞானபிரகாசை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஞானபிரகாஷ் ஏற்கனவே உயரிழந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.