மின்சாரம் தாக்கி ஊழியர் சாவு
விருத்தாசலம் அருகே மின்சாரம் தாக்கி தற்காலிக ஊழியர் உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு நிவாரணம் கேட்டு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
கம்மாபும்
மின்சாரம் தாக்கி பலி
விருத்தாசலத்தை அடுத்த ஊத்தங்கால் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் நாராயணசாமி(வயது 40). இவர் அதே கிராமத்தில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் கன மழை பெய்ததால் பொன்னாலகரத்தில் உள்ள மின் மாற்றியில் பழுது ஏற்பட்டது.
இதை அறிந்த நாராயணசாமி மின் மாற்றியில் ஏறி பழுதை சரிசெய்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது.
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே நாராயணசாமி பரிதாபமாக இறந்தார்.
மறியல்-முற்றுகை
இதுபற்றி அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் கிராமமக்கள் மின்சாரம் தாக்கி பலியான நாராயணசாமி குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கக்கோரி மின்வாரிய அலுவலகம் அருகில் உள்ள விருத்தாசலம்-கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
இது பற்றிய தகவல் அறிந்து வந்த ஊமங்கலம் போலீசார் அவர்களை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் இதை ஏற்க மறுத்த அவர்கள் மறியலை கைவிட்டு மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பேச்சுவார்த்தை
இதை அறிந்து விருத்தாசலம் தாசில்தார் ஆரோக்கியராஜ் தலைமையில், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பிருந்தா, சாகுல் ஹமீது ஆகியோர் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இறந்து போன நாராயணசாமியின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு மற்றும் அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதற்கு நடவடிக்கை எடுக்க பரிசீலிப்பதாக தாசில்தார் தெரிவித்தார். இதை ஏற்ற நாராயணசாமியின் உறவினர்கள் மற்றும் கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
முன்னதாக போராட்டத்தின் போது பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை அருகில் இருந்த பெண்கள் முதலுதவி சிகிச்சை அளித்து அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த மறியல் போராட்டத்தால் விருத்தாசலம்-கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.