ரெயில் மோதி ஊழியர் பலி
நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணியின்போது ரெயில் மோதி ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணியின்போது ரெயில் மோதி ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
ரெயில்வே ஊழியர்
நாகர்கோவில் கோட்டார் வாகையடி குலாளர் தெருவை சேர்ந்தவர் மணி (வயது 55). இவர் ரெயில்வே துறையில் தண்டவாள பராமரிப்பு ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலையில் நாகர்கோவில் ஒழுகினசேரி ரெயில்வே பாலம் அருகே உள்ள தண்டவாளம் பகுதியில் சீரமைப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக நாகர்கோவிலில் இருந்து கொச்சுவேலிக்கு நோக்கி சென்ற ரெயில் வந்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த ரெயில் தண்டவாளத்தில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மணி மீது மோதி விட்டு சென்றது.
பரிதாப சாவு
இதில் மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்ட சக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி ரெயில்வே நிர்வாகத்திற்கும், நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் ஜெயபால் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து மணியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போக்குவரத்து நெரிசல்
இதற்கிடையே ஒழுகினசேரி பாலம் அருகே உள்ள தண்டவாளத்தில் மணியின் உடல் கிடந்ததை பாலத்தில் நின்றபடி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். அவர்கள் தங்களது வாகனங்களை ஒழுகினசேரி பாலத்தில் ஆங்காங்கே நிறுத்தியிருந்தனர்.
இதனால் ஒழுகினசேரி பகுதியில் நேற்று காலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒழுகினசேரி பாலத்தில் இருந்து அப்டா மார்க்கெட் வரையும் மறுபுறம் வடசேரி சந்திப்பு வரையிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
இதுபற்றி தகவல் அறிந்த நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.