வாகனம் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
வேலூர் அருகே வாகனம் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
அணைக்கட்டு தாலுகா பள்ளிகொண்டா கோட்டை தெருவை சேர்ந்தவர் ராஜகுரு (வயது 38). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். ராஜகுரு வேலூரில் உள்ள தனியார் கூரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவர் தினமும் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று வீடு திரும்புவது வழக்கம். இரவு 10 மணியளவில் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அன்பூண்டியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது அந்த வழியாக வேகமாக சென்ற வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜகுருவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் அங்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து ராஜகுருவின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகிறார்கள்.