விழுப்புரத்தில் பெண்ணை தாக்கியவர்களை தட்டி கேட்டவருக்கு நேர்ந்த கொடூரம்:பல்பொருள் அங்காடிக்குள் ஊழியர் கத்தியால் குத்திக்கொலைஅண்ணன்-தம்பியை பிடித்து போலீசார் விசாரணை


தினத்தந்தி 30 March 2023 12:15 AM IST (Updated: 30 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் பல்பொருள் அங்காடியில் பெண்ணை தாக்கியவர்களிடம் தட்டிகேட்டவரை கத்தியால் குத்திக்கொலை செய்த அண்ணன்-தம்பியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம்

பல்பொருள் அங்காடி ஊழியர்

விழுப்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அபுபக்கர் மகன் இப்ராஹீம் (வயது 45). இவர் விழுப்புரம் எம்.ஜி.சாலையில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

கடந்த 2 மாதமாக உடல்நிலை சரியில்லாமல் இவர் வீட்டில் இருந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை நோன்பு கஞ்சி தயாரிக்க தேவையான பொருட்களை வாங்குவதற்காக இப்ராஹீம், தான் வேலை பார்க்கும் பல்பொருள் அங்காடிக்கு சென்றார். அந்த சமயத்தில் அந்த கடைக்குள் பதுங்கி நின்ற ஒரு பெண்ணிடம் 2 வாலிபர்கள் தகராறு செய்து கொண்டிருந்ததோடு அவரை திட்டி தாக்கினர்.

கத்தியால் குத்திக்கொலை

இதைப்பார்த்த இப்ராஹீம் மற்றும் அரசமங்கலத்தை சேர்ந்த ராமதாஸ் மகன் தீபக் (23) ஆகிய இருவரும் அவர்களை தட்டிக்கேட்டனர். இதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள் இருவரும், இப்ராஹீம், தீபக் ஆகிய இருவரையும் தாக்கியதோடு தாங்கள் வைத்திருந்த கத்தியால் குத்தினர்.

இதில் இப்ராஹீமின் வயிற்றிலும், தீபக்கின் முகத்திலும் காயம் ஏற்பட்டது. காயமடைந்த சிறிது நேரத்தில் ரத்தம் சொட்ட, சொட்ட இப்ராஹீம் அதே இடத்தில் சுருண்டு விழுந்தார். உடனே அந்த வாலிபர்கள் இருவரும் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். அவர்களை அங்கிருந்த கடை ஊழியர்கள் மடக்கிப்பிடித்தனர். பின்னர் இதுபற்றி விழுப்புரம் மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

2 பேரிடம் விசாரணை

தகவலின்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் மருது மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இப்ராஹீம், தீபக் ஆகிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் இருவருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே இப்ராஹீம் பரிதாபமாக இறந்தார். தீபக் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே பிடிபட்ட 2 வாலிபர்களையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் இருவரும் விழுப்புரம் பெரியகாலனி ஜி.ஆர்.பி. தெருவை சேர்ந்த ஞானசேகரன் மகன்கள் ராஜசேகர் (33), வல்லரசு (24) என்பது தெரியவந்தது.

தொடர்ந்து, அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் வெளியான தகவல்கள் விவரம் வருமாறு:-

கள்ளக்காதல் விவகாரம்

ஞானசேகரனுக்கும், ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதையறிந்த ராஜசேகர், வல்லரசு இருவரும் அந்த பெண்ணையும், தனது தந்தையையும் கண்டித்துள்ளனர். இந்த சூழலில் நேற்று மாலை அந்த பெண்ணை, பெரியகாலனி பகுதியில் ராஜசேகரும், வல்லரசுவும் பார்த்தனர். உடனே அவர்கள் இருவரும், அப்பெண்ணிடம் தகராறு செய்தனர்.

மேலும் அந்த பெண்ணை தகாத வார்த்தையால் திட்டியதோடு அவரை தாக்கினர். உடனே அந்த பெண், அவர்களிடமிருந்து தப்பி ஓடினார். இருப்பினும் அந்த பெண்ணை இருவரும் பின்தொடர்ந்து துரத்திச்சென்றனர். அந்த பெண், விழுப்புரம் எம்.ஜி.சாலையில் உள்ள பல்பொருள் அங்காடிக்குள் சென்று பதுங்கிக்கொண்டார். இதைப்பார்த்த அவர்கள் இருவரும் அந்த கடைக்குள் புகுந்து அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

அந்த சமயத்தில் அங்கிருந்த இப்ராஹீம், தீபக் ஆகியோர் தட்டிக்கேட்ட போது ஏற்பட்ட தகராறில் கொலை நடந்துள்ளது தெரியவந்தது.

தொடர்ந்து, ராஜசேகர், வல்லரசு ஆகிய இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல்பொருள் அங்காடி ஊழியர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

............

(பாக்ஸ்) நெஞ்சை உலுக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரல்

விழுப்புரம் பல்பொருள் அங்காடி கடையின் அருகில் இப்ராஹீம் என்பவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். அவர் இறப்பதற்கு முன்பு, வயிற்றில் இருந்து ரத்தம் சொட்ட, சொட்ட வலியால் கதறி துடித்து, அடுத்த சில நிமிடத்தில் அவர் அதே இடத்தில் மயங்கி சுருண்டு விழுந்தார். இதை அருகில் இருந்த சிலர், தங்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூகவலைதளங்களில் பதிவிட்டனர். நெஞ்சை உலுக்கும் அந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

=


Next Story