தனியார் நிறுவன ஊழியர் குத்திக்கொலை
கெலமங்கலம் அருகே மது போதையில் தனியார் நிறுவன ஊழியரை கத்தியால் குத்திக்கொலை செய்த நண்பரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ராயக்கோட்டை
கெலமங்கலம் அருகே மது போதையில் தனியார் நிறுவன ஊழியரை கத்தியால் குத்திக்கொலை செய்த நண்பரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தனியார் நிறுவன ஊழியர்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அடவிசாமிபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 36). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு திருமணமாகி இந்திராணி என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
இதனிடையே நேற்று முன்தினம் இரவு வெங்கடேஷ், தனது உறவினர் முனிராஜியுடன் கெலமங்கலம் அருகே உள்ள காமையூர் கிராமத்திற்கு மோட்டார்சைக்கிளில் சென்றார். பின்னர் இவர்கள் அதேபகுதியை சேர்ந்த நண்பர்கள் நாகேஷ் (26), திம்மராயன் (28), மோகன் (32) ஆகிய 3 பேருடன் காமையூர் அருகே கிராமத்தில் அமர்ந்து திறந்த வெளியில் மது குடித்தனர். அப்போது மது போதையில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
கத்திக்குத்து
அப்போது ஆத்திரம் அடைந்த மோகன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வெங்கடேசை சரமாரியாக குத்தினார். இதில் வெங்கடேஷ் படுகாயம் அடைந்தார். இதையடுத்து மோகன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த வெங்கடேசை அருகில் இருந்த நண்பர்கள் நாகேஷ், திம்மராயன், முனிராஜ் ஆகிய 3 பேரும் மீட்டு தேன்கனிக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் வெங்கடேசை மேல் சிகிச்சைக்காக ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கெலமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ேபாலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் வலைவீச்சு
இதுகுறித்து வெங்கடேசின் மனைவி இந்திராணி கெலமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மோகனை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.