நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் லஞ்சம் கேட்கும் ஊழியர்கள்?


நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் லஞ்சம் கேட்கும் ஊழியர்கள்?
x
தினத்தந்தி 15 Feb 2023 12:15 AM IST (Updated: 15 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து போலீசார் நேரில் சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் தற்போது சம்பா அறுவடை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை எளிதில் விற்பனை செய்யும் வகையில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மாவட்டத்தில் மொத்தம் 203 கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விற்பனை நிலையங்களுக்கு விவசாயிகள் நெல் மூட்டைகளை கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். அவ்வாறு விவசாயிகள் கொண்டு செல்லும் நெல் மூட்டைகளுக்கு, கொள்முதல் நிலைய ஊழியர்கள் இறக்கு கூலி, ஏற்று கூலி மற்றும் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்தது.

போலீசார் ஆய்வு

அதன் அடிப்படையில் மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்ய குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை கூடுதல் இயக்குனர் அருண், போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீஸ் சூப்பிரண்டு கீதா மேற்பார்வையில் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகர் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரேகா மதி மற்றும் போலீசார் விருத்தாசலம் அருகே கோ.ஆதனூர், கோபாலபுரம் உள்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அவர்கள், அங்கிருந்த விவசாயிகளிடம் நெல் மூட்டைகளுக்கு இறக்கு கூலி மற்றும் ஏற்று கூலி வாங்கப்படுகிறதா? என்றும், கொள்முதல் செய்வதற்கு லஞ்சம் வாங்கப்படுகிறதா? எனவும் கேட்டறிந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story