திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியில் காரில் வந்தவர்கள் மீது ஊழியர்கள் தாக்குதல்


திருமங்கலம் அருகே  கப்பலூர் சுங்கச்சாவடியில் காரில் வந்தவர்கள் மீது ஊழியர்கள் தாக்குதல்
x

திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியில் வெகுநேரம் கார் நிறுத்தி வைக்கப்பட்டதால் ஏற்பட்ட தகராறில் காரில் வந்தவர்கள் மீது சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை

திருமங்கலம்

திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியில் வெகுநேரம் கார் நிறுத்தி வைக்கப்பட்டதால் ஏற்பட்ட தகராறில் காரில் வந்தவர்கள் மீது சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சுற்றுலா

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ளது கப்பலூர் சுங்கச்சாவடி. இந்த சுங்கச்சாவடி விதிமுறைக்கு புறம்பாக செயல்படுவதாக கூறி இதனை மாற்ற வேண்டும் என உள்ளூர் வாகன உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவ்வப்போது இங்கு சுங்கச்சாவடி ஊழியர்கள், அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகளை தாக்கும் சம்பவமும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்நிலையில் நேற்று சென்னை திருமுல்லைவாயிலை சேர்ந்த பிரபு மற்றும் அவரது குடும்பத்தினர் விடுமுறைக்காக திருச்செந்தூர், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா சென்று விட்டு மீண்டும் சென்னை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர்.

திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடிக்கு வந்தபோது பாஸ்டேக் 4-வது பாதையில் எந்திர கோளாறு காரணமாக தாமதமாகி உள்ளது. அவரின் கார் முன்னால் நின்றிருந்த வாகனம் பாஸ்டேக் கணக்கில் பணம் இல்லாததால் வெகு நேரம் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் தெரிகிறது. பின்னர் அந்த வாகனம் புறப்பட்டு சென்றது. இதையடுத்து பிரபுவின் வாகனம் பாஸ்டேக் கட்டணம் எடுப்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டது. கட்டணம் எடுக்கப்பட்ட பின்னரும் பிரபுவின் கார் வெகுநேரம் நிறுத்தி வைக்கப்பட்டதால் சுங்கச்சாவடி ஊழியர்களை பிரபு சத்தம் போட்டதாக கூறப்படுகிறது.

தாக்குதல்

பின்னர் அவர் காரை இயக்க முயன்றபோது சுங்கச்சாவடி பெண் ஊழியர் ஒருவர் பிரபுவை தகாத வார்த்தைகளால் திட்டி, அங்கிருந்த ஊழியர்களிடம் காரை நிறுத்த கூறினாராம். இதனால் பிரபு காரில் இருந்து கீழே இறங்கி சுங்கச்சாவடி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது சுங்கச்சாவடி ஊழியர்கள் பிரபுவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதை தடுக்க முயன்ற பிரபுவின் குடும்பத்தினரையும் ஊழியர்கள் தாக்கியதாக தெரிகிறது. இதனால் இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அறிந்த திருமங்கலம் போலீசார் அங்கு விரைந்து சென்று பிரபு மற்றும் அவர் குடும்பத்தினரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையே பிரபு மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அந்த வீடியே தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

சுங்கச்சாவடியை மாற்ற கோரிக்கை

இந்த சுங்கச்சாவடியை அகற்ற தமிழக அரசும், மத்திய அரசும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என உள்ளூர் வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர். மதுரையில் இருந்து நான்கு வழிச்சாலையை பயன்படுத்தாமல் திருமங்கலம், கல்லுப்பட்டி, பேரையூர், சாத்தூர், ராஜபாளையம், தென்காசி ஊர்களுக்கு செல்லும் வாகனங்கள் கூட வீணாக சுங்க கட்டணம் செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சுங்கச்சாவடியை மாற்ற வேண்டும் என்பதே திருமங்கலம் பகுதி வாகன உரிமையாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.


Next Story