மின்வாரிய அலுவலகத்தில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
நெல்லையில் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லையில் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊழியர்கள் மீது தாக்குதல்
நெல்லை வண்ணார்பேட்டை மின்வாரிய அலுவலகத்தில் கம்பியாளராக பணியாற்றிய முத்துகிருஷ்ணன், பாளையங்கோட்டை சமாதானபுரத்தை சேர்ந்த முத்துப்பாண்டி ஆகிய 2 மின் ஊழியர்களும் நேற்று முன்தினம் பாளையங்கோட்டை ராஜாபுதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள மின்கம்பத்தில் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் மின் ஊழியர்களை தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர்கள் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உள்ளிருப்பு போராட்டம்
இந்த நிலையில் ஊழியர்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஊழியர்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கக்கோரியும் மின்ஊழியர்கள் பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக சி.ஐ.டி.யூ. ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் நெல்லை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து ஊழியர்கள் தற்காலிகமாக தங்களது போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சென்றனர்.
இதற்கிடையே மின்வாரிய ஊழியர்கள் தாக்கப்பட்டது குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.