பெண்களுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம்
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் வருகிற 15-ந் தேதி, பெண்களுக்கான சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் வருகிற 15-ந் தேதி, பெண்களுக்கான சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேலை வாய்ப்பு முகாம்
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் பெண்களுக்கான சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம், கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடக்கிறது. இந்த முகாம் வருகிற 15-ந் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.
இந்த முகாமில் பணியிடங்கள் முழுமையாக பெண் மனுதாரர்களுக்கு மட்டுமே பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதியாக 2020, 2021 மற்றும் 2022 கல்வியாண்டில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது முதல் 20 வயதுக்குள் இருக்க வேண்டும். உடற்தகுதியாக உயரம் 150 சென்டி மீட்டரும், எடை 40 கிலோ இருக்க வேண்டும்.
சிறப்பு பயிற்சி
தேர்வு செய்யப்படும் பெண்களுக்கு 12 நாட்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. மாத சம்பளமாக ரூ.16,557-ம், உணவு, தங்கும் இடம் மற்றும் போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும். இதில், எஸ்.சி., எஸ்.டி. மனுதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்தகுதியுடைய பணிதேடுபவர்கள் தங்களுடைய 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச்சான்றிதழ், ஆதார் அட்டை உள்ளிட்டவை அசல் மற்றும் நகல்களுடன் முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.