பன்னாட்டு நிறுவனத்தில் வேலை- தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்
ஆகஸ்டு 15-ந்தேதி நடக்கும் கட்டுமான தொழிலாளர் திறன் பயிற்சியில் கலந்து கொண்டால் 100 சதவீதம் பன்னாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கும் என்று நாகை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் ஞானப்பிரகாசம் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்டு 15-ந்தேதி நடக்கும் கட்டுமான தொழிலாளர் திறன் பயிற்சியில் கலந்து கொண்டால் 100 சதவீதம் பன்னாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கும் என்று நாகை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் ஞானப்பிரகாசம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திறன் பயிற்சி
நாகை மாவட்டத்தை சேர்ந்த நல வாரியத்தில் பதிவு செய்த கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் கழகம் சார்பில் 3 மாதம் நடக்கும் இந்த பயிற்சி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 15-ந் தேதி தொடங்குகிறது.
இந்த பயிற்சியில் கொத்தனார், வெல்டர், மின்சார பயிற்சி, குழாய் பொருத்துபவர், மரவேலை, கம்பி வளைப்பவர் ஆகிய தொழிலில் ஈடுபடுபவர்கள் பங்கேற்கலாம்.
இந்த பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் அமைய உள்ள கட்டுமான கழக பயிற்சி நிறுவனத்தில் ஒரு மாதமும், காஞ்சீபுரம் மாவட்டம் நீவலூரில் உள்ள தனியார் பயிற்சி நிலையத்தில் 2 மாதங்களும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
நேரில் விண்ணப்பிக்கலாம்
பயிற்சி பெற விரும்புபவர்கள் 5-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை மற்றும் ஐ.டி.ஐ. படித்திருந்த 18 வயது முதல் 40 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் இதில் பயிற்சி பெறுவோருக்கு பன்னாட்டு நிறுவனத்தில் (எல் அண்ட் டி) 100 சதவீதம் வேலை வாய்ப்பு வழங்கப்படும்.
இதில் ஒரு வார பயிற்சியில் கலந்து கொள்பவருக்கு தினமும் ரூ.800 வழங்கப்படும். அந்த தொகையிலிருந்து உணவுக்கு பிடித்தம் செய்யப்படும். எனவே இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள தொழிலாளர்கள் தங்களுடைய நலவாரிய அட்டை, கல்வித்தகுதி, ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் வங்கி புத்தகம் ஆகிய நகலுடன் நாகை பால்பண்ணைசேரியில் உள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகத்தை நேரில் அணுகி விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.