ஈமு நிறுவன மோசடி வழக்கு: முதலீட்டாளர்களுக்கு ரூ.2¾ கோடி வழங்க வேண்டும் - மதுரை கோர்ட்டு தீர்ப்பு


ஈமு நிறுவன மோசடி வழக்கு:  முதலீட்டாளர்களுக்கு  ரூ.2¾ கோடி வழங்க வேண்டும் - மதுரை கோர்ட்டு தீர்ப்பு
x

ஈமு நிறுவன மோசடி வழக்கில் முதலீட்டாளர்களுக்கு ரூ.2¾ கோடி வழங்க வேண்டும் என்று மதுரை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது

மதுரை


ஈரோடு மாவட்டத்தை தலைமையிடமாக கொண்ட ஈமு கோழிப்பண்ணை நிறுவனம் நெல்லையிலும் செயல்பட்டது. தங்களது பண்ணையில் முதலீடு செய்தால் மாதந்தோறும் அதிக லாபம் தருவதாக கூறி கடந்த 2012-ம் ஆண்டில் ஏராளமான தொகையை வசூலித்தனர். சில மாதங்களாக மாதாந்திர லாபத்தொகையையும் முதலீட்டாளர்கக்கு வழங்கினர். இதனால் மேலும் பலர் லட்சக்கணக்கான தொகையை அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். அதிக முதலீடுகளை வசூலித்த பின்பு, திடீரென நிறுவனத்தை மூடிவிட்டு, அதன் நிர்வாகிகள் தலைமறைவானார்கள்.

இதுகுறித்த புகார்களின்பேரில் நெல்லை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சம்பந்தப்பட்ட ஈமு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர்கள் மயில்சாமி, சக்திவேல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை மதுரை பொருளாதார குற்றங்களுக்கான சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. இதில் அரசு வக்கீல் ஆஜராகி, நெல்லை பகுதியில் மட்டும் 141 பேரிடம் ரூ.2 கோடியே 50 லட்சத்து 67 ஆயிரத்து 500 மோசடி செய்தனர். இவர்கள் மீது ஏற்கனவே ஈரோடு, கோவை உள்ளிட்ட பகுதிகளிலும் மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. பல்வேறு சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன என்றார். விசாரணை முடிவில், நீதிபதி ஜோதி அளித்த தீர்ப்பு வருமாறு:-

ஈமு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் மயில்சாமிக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.1.35 கோடி அபராதமும், ஈமு நிறுவனத்திற்கு ரூ.1 கோடியே 35 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது. சக்திவேலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.13 லட்சத்து 51 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. ஈமு நிறுவனம் மற்றும் அதன் மேலாண் இயக்குனருக்கு விதிக்கப்பட்ட அபராதத்தொகை ரூ.2 கோடியே 70 லட்சத்தை முதலீட்டாளர்கள் 135 பேருக்கு சிவில் கோர்ட்டின் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.


Next Story