ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடக்கம்
மயிலாடுதுறை நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கியது.
மயிலாடுதுறை நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கியது.
போக்குவரத்துக்கு இடையூறு
மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியில் காமராஜர் பஸ் நிலையம் மற்றும் திருவாரூர், நாகை மார்க்கத்திற்கு செல்லும் புதிய பஸ் நிலையம் என்று தனித்தனியாக 2 பஸ் நிலையங்கள் உள்ளன. தினந்தோறும் 300-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்லும் நிலையில் ஆக்கிரமிப்புகளால் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதனை தடுக்கும் வகையில் மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட நெடுஞ்சாலைத்துறை சாலைகள் மற்றும் நகராட்சி சாலைகளில் ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டுகள், சன்சைடுகள், விளம்பரதட்டிகள், தரைக்கடைகள், தள்ளுவண்டிகள் மற்றும் கீற்றுக் கொட்டகைகளை அகற்றிக்கொள்ள மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
பணிகள் தொடக்கம்
இதுகுறித்து கடந்த 2 நாட்களாக ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை கச்சேரி சாலையில் தொடங்கினர்.
அப்போது காந்திஜி சாலை, பஸ் நிலையங்களை சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மயிலாடுதுறை நகரில் ஓரிரு நாட்களில் ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட்டு விடும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.