தமிழ்நாட்டில் 8366 நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு: மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்


தமிழ்நாட்டில் 8366 நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு: மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
x

தமிழ்நாட்டில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 8366 நீர்நிலைகளை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 8366 நீர்நிலைகளை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள ஒரு லட்சத்து 6957 நீர்நிலைகளில் 8366 நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு நடத்திய நீர்நிலைகள் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. பாதுகாக்கப்பட வேண்டிய நீர்நிலைகளில் கிட்டத்தட்ட 8%க்கும் கூடுதலானவை ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதை ஏற்க முடியாது!

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நீர்நிலைகளில் 5 நீர்த்தேக்கக்கங்கள், 1458 ஏரிகள், 3565 குளங்கள் ஆகியவையும் அடங்கும். பாசன ஆதாரமாகவும், குடிநீர் ஆதாரமாகவும் திகழும் இந்த நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு அனுமதிக்கப்பட்டது பெரும் தவறு ஆகும். ஆக்கிரமிப்பு அளவிடப்பட்ட 4933 நீர்நிலைகளில் 1328-இல் 75% வரையிலும், 1009-இல் 75%க்கும் அதிகமாகவும் ஆக்கிரமிப்புகள் உள்ளன. உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படாவிட்டால் இந்த நீர்நிலைகள் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுவிடும்!

நீர்நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டியதன் தேவையை உயர்நீதிமன்றம் தொடங்கி ஐ.நா. அமைப்பு வரை வலியுறுத்தி வருகின்றன. நீர்நிலைகள் பாதுகாக்கப்படவில்லை என்றால் விவசாயமும், குடிநீர் ஆதாரங்களும் முற்றிலுமாக அழிந்து விடும். இதை உணர்ந்து ஆக்கிரமிக்கப்பட்ட நீர்நிலைகளை மீட்கவும், மீதமுள்ள நீர்நிலைகளை பாதுகாக்கவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!

நீர்நிலைகளுக்கான அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் தமிழக சட்டப்பேரவையில் "தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சிறப்புத் திட்டங்களுக்கான சட்டம் (Tamil Nadu Land Consolidation (for Special Projects) Act, 2023)" இயற்றப்பட்டிருப்பது நிலைமையை மேலும் மோசமாக்கி விடும். நீர்நிலைகளை பாதுகாப்பதற்காக அந்த சட்டத்தை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும்!

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.



Next Story