அரசு நிலங்களை தனிநபர்கள் ஆக்கிரமிப்பதை அனுமதிக்க கூடாது- அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு அறிவுறுத்தல்


அரசு நிலங்களை தனிநபர்கள் ஆக்கிரமிப்பதை அனுமதிக்க கூடாது- அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு அறிவுறுத்தல்
x

அரசு நிலங்களை தனி நபர்கள் ஆக்கிரமிப்பதை அனுமதிக்க கூடாது என அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.

மதுரை


அரசு நிலங்களை தனி நபர்கள் ஆக்கிரமிப்பதை அனுமதிக்க கூடாது என அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.

ஆக்கிரமிப்பு

தென்காசியை சேர்ந்த பலர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், சிவகிரி பேரூராட்சியில் பெரியார் கடை பஜார் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் தனிநபர்கள் சிலர், வணிக ரீதியிலான கட்டிடத்தை கட்டுகின்றனர். புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய கட்டிடத்தை அகற்ற உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, சம்பந்தப்பட்ட இடத்தில் ஆக்கிரமிப்பு குறித்து இருதரப்பினரின் கருத்துகளை கேட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தது.

ஆனாலும் கோர்ட்டு உத்தரவின்பேரில் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கடந்த விசாரணையின் போது தென்காசி கலெக்டர் மற்றும் வருவாய் துறை அதிகாரி மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அனுமதிக்க கூடாது

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கோர்ட்டு உத்தரவின்பேரில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினர். அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு தரப்பினர் ஆக்கிரமிப்பு அகற்றக்கூடாது என சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டதால் தொய்வு ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து நீதிபதிகள், அரசு நிலங்களை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்ய அனுமதிக்கக் கூடாது. ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் காட்டக்கூடாது என்றனர்.

முடிவில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்ற என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த அறிக்கையை 2 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Related Tags :
Next Story