திருவாரூர் கடைவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி
திருவாரூர் கடைவீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.
திருவாரூர் கடைவீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.
ஆக்கிரமிப்புகள்
திருவாரூர் கடைவீதிகளில் சாலையின் இருபுறத்திலும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன. இந்த ஆக்கிரமிப்புகளால் கடைவீதி பகுதிகளில் எந்நேரமும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வந்தது.
பொதுமக்கள் வந்து செல்வதற்கு ஆக்கிரமிப்புகள் இடையூறாக இருப்பதாகவும் உடனடியாக அதனை அகற்றி பொதுமக்கள் இடையூறின்றி வந்து செல்லும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தன்னார்வ அமைப்பினர், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆணையர் அறிவிப்பு
இதனைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்தவர்கள் ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றிக் கொள்ளுமாறு திருவாரூர் நகராட்சி ஆணையர் பிரபாகரன் அறிவித்தார். ஆனாலும் கடைவீதிகளில் பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருந்தது. அதனைத் தொடர்ந்து நகராட்சி ஆணையர் பிரபாகரன் தலைமையில் நெடுஞ்சாலை துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் பொக்லின் எந்திரங்களை கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
மேலும் ஆக்கிரமிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்கள் டிராக்டர் மற்றும் லாரிகள் மூலம் நகராட்சி அலுவலக வளாகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை முன்னிட்டு கடைவீதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
பரபரப்பு
ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் இடையூறு இன்றி பொருட்களை வாங்கி செல்ல முடிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். போலீஸ் பாதுகாப்புடன் பொக்லின் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது திருவாரூர் கடைவீதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.