கஞ்சநாயக்கன்பட்டியில் ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும்
கஞ்சநாயக்கன்பட்டியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
அருப்புக்கோட்டை,
கஞ்சநாயக்கன்பட்டியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஒன்றியக்குழு கூட்டம்
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழுவின் சாதாரணக்கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் சசிகலா தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சூரியகுமாரி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் தங்களது கோாிக்கை குறித்து கூறினர். அதன் விவரம் வருமாறு:-
கவுன்சிலர் சீனிவாசன்:- ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்குவது போல் கவுன்சிலர்களுக்கும் வேலை செய்வதற்கு நிதி ஒதுக்க வேண்டும். எங்களுடைய பதவிக்காலம் இன்னும் ஒரு வருடமே இருப்பதால் எங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கி தரவேண்டும். 100 நாள் வேலையை இரண்டு மாதம் நிறுத்தி வையுங்கள். விவசாய பணிகளுக்கு ஆள் கிடைக்கவில்லை. கஞ்சநாயக்கன்பட்டியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைவர்: ஆக்கிரமிப்புகளை அகற்ற பஞ்சாயத்து மூலம் தீர்வு காண வேண்டும்.
தொற்றுநோய் பரவும் அபாயம்
வாழவந்தராஜ்:- கூத்தி பாறை பகுதியில் கல்குவாரி செயல்படுவதாக தெரிகிறது. அதற்கு ஊராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளதா?. நகராட்சி பகுதியில் அள்ளப்படும் குப்பைகள் வாகனங்களில் சுக்கிலநத்தம் குப்பை கிடங்கிற்கு குப்பைகளை கொண்டு வரும்போது தார்பாய் போட்டு மூடாமல் வருவதால் சாலையில் ஆங்காங்கே சிதறி சுகாதாரமற்று கிடக்கிறது.
சுப்புலட்சுமி:- செம்பட்டி பகுதியில் வாருகால் வசதிகள் இல்லாததால் பெரும்பாலான பகுதிகளில் மழை நீரும், கழிவுநீர் சாலையில் தேங்கி நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தலைவர்:- உறுப்பினர்களின் கோரிக்கை அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது.