நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்


நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
x

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

தேனி

வடகிழக்கு பருவமழை

தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வடகிழக்கு பருவமழை காலத்துக்கு முன்பாகவே மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கும் விழிப்புணர்வு இருக்க வேண்டும். பேரிடரின் போது பொது கட்டிடங்களை முகாம்களாக பயன்படுத்த ஏதுவாக மாவட்ட பேரிடர் மேலாண்மைத் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கட்டிடங்கள் போதுமானதாகவும், தகுதியானதாகவும் உள்ளதா என ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்து அனுப்ப வேண்டும்.

மேலும் பொதுப்பணித்துறை கட்டிடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள கட்டிடங்களில் பழுதுகள் இருப்பின் அதனை சரிசெய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஆறு, ஏரி, ஓடை, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நீர்நிலைகளின் கரைகளின் உறுதித் தன்மையினை ஆராய்ந்து, பலவீனமாக உள்ள கரைகளை பலப்படுத்த ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அவசர காலங்களில் கிராமங்களில் இருந்து பாதுகாப்பாக வெளியேறும் வழிகளுடன் கூடிய செயல் திட்டத்தினை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் மூலமாக தயார் செய்து வைத்திருத்தல் வேண்டும். வெள்ளத தடுப்பு பணிக்காக போதுமான அளவில் மணல் மூட்டைகளை தேவைப்படும் இடங்களில் முன்னதாகவே இருப்பு வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story