நீர்வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்


நீர்வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்
x

நீர்வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தேவையான நடவடிக்கைகள் உடனே எடுக்கப்படும் என்று சிவகாசி ஆர்.டி.ஓ. விஸ்வநாதன் உறுதி அளித்தார்.

விருதுநகர்

சிவகாசி,

நீர்வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தேவையான நடவடிக்கைகள் உடனே எடுக்கப்படும் என்று சிவகாசி ஆர்.டி.ஓ. விஸ்வநாதன் உறுதி அளித்தார்.

குறைதீர்க்கும் கூட்டம்

சிவகாசி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிவகாசி ஆர்.டி.ஓ. விஸ்வநாதன் தலைமை தாங்கினார். தாசில்தார் ஆனந்தராஜ் வரவேற்றார். கூட்டத்தில் சிவகாசி தாசில்தார் லோகநாதன், ஸ்ரீவில்லிபுத்தூர் தாசில்தார் ரெங்கசாமி மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த 33 அதிகாரிகள், 36 விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய விளக்கம் அளித்தனர். அதன் விபரம் வருமாறு:-

நடவடிக்கை

ராமச்சந்திரன்: உரக்கடைகளில் யூரியா வாங்கும் போது இதர பொருட்களை சேர்த்து வாங்க கட்டாயப்படுத்தும் நிலை உள்ளது.

வேளாண் அதிகாரி: சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள சில உரக்கடைகளில் திடீர் ஆய்வு செய்யப்பட்டது. இதில் யூரியாவுடன் இதர பொருட்கள் வாங்க கடைக்காரர்கள் வற்புறுத்தியது தெரிய வந்தது. இதையடுத்து கடைக்காரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு முகாம்கள்

ஞானகுரு: கோட்டைப்பட்டியில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரி வெங்கடேஸ்வரபுரத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் கோட்டைப்பட்டியில் உள்ள விவசாயிகள் தங்கள் கால்நடைகளை சிகிச்சைக்காக 6 கிலோ மீட்டர் தூரம் அழைத்து செல்ல வேண்டி உள்ளது.

அதிகாரி: வெங்கடேஸ்வரபுரத்தில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரியில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு இயங்கி வருகிறது. தேவைப்படும் பட்சத்தில் கோட்டைப்பட்டியில் சிறப்பு முகாம்கள் அமைத்து கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும்.

விவசாயிகள்: ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் உள்ள பொன்னாங்கன்னி, வடமலைக்குறிச்சி கண்மாய் நீர் வரத்து பாதையில் ஆக்கிரமிப்பு உள்ளது. இதனை அகற்ற தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆர்.டி.ஓ. விஸ்வநாதன்: நீர்வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தேவையான நடவடிக்கை உடனே எடுக்கப்படும். அதேபோல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டி உள்ள விவசாய நிலங்களுக்கு சோலார் வேலி அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story