ஆக்கிரமிப்புகளை அகற்றி பாசன வாய்க்காலை தூர்வார வேண்டும்
ஆக்கிரமிப்புகளை அகற்றி பாசன வாய்க்காலை தூர்வார வேண்டும்
கூத்தாநல்லூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றி பாசன வாய்க்காலை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
பாசன வாய்க்கால்
கூத்தாநல்லூர் பகுதியில் பெரும்பாலான மக்கள் விவசாயத்தையே வாழ்வாதாரமாக கொண்டு வயல்களில் ஒவ்வொரு ஆண்டும் நெல், உளுந்து, பயறு, பருத்தி போன்ற பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இத்தகைய சாகுபடி பணிகளை மேற்கொள்வதற்காக ஆறுகளில் இருந்து வரும் தண்ணீரை வயல்களுக்கு கொண்டு செல்வதற்காக, ஒவ்வொரு பகுதியிலும் பாசன வாய்க்கால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பாசன வாய்க்கால் சரியாக இருந்தால் மட்டுமே ஆற்றில் இருந்து வரும் தண்ணீரை பாசன வாய்க்கால் மூலம் கொண்டு சென்று எவ்வித பாதிப்பும் இல்லாமல் சாகுபடி பணிகளை அப்பகுதி விவசாயிகள் மேற்கொள்ள முடியும். திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் உள்ள பனங்காட்டாங்குடி பாசன வாய்க்கால் மூலம் வெண்ணாற்றில் இருந்து வரும் தண்ணீரை கொண்டு சென்று பனங்காட்டாங்குடி, குனுக்கடி மற்றும் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் பல ஆண்டுகளாக சாகுபடி பணிகளை செய்து வருகின்றனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும்
கடந்த 10 ஆண்டுகளாக பனங்காட்டாங்குடி பாசன வாய்க்கால் பல தலைப்பு இடங்களில் ஆக்கிரப்பில் சிக்கி வாய்க்கால் இருந்த இடம் கூட தெரியாத அளவிற்கு மேடான பகுதியாக ஆக்கப்பட்டது. இதனால் காலம் காலமாக பாசன வாய்க்கால் வழியாக சென்ற தண்ணீர் செல்ல முடியாமல் தடைப்பட்டு போனது. இதனால், ஆற்றில் இருந்து வரும் தண்ணீர், பாசன வாய்க்கால் மூலம் வயல்களுக்கு செல்ல முடியாமல் போனதால், கடந்த சில ஆண்டுகளாக விவசாய பணிகளை வழக்கம் போல செய்ய முடியாமல் சிரமம் அடைந்து வருவதாக அந்த பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.
பாசன வாய்க்கால் பல இடங்களில் ஆக்கிரப்பில் சிக்கி முறையாக வாய்க்காலில் தண்ணீர் செல்லாததால், பல ஏக்கர் விவசாய நிலங்கள், சாகுபடி செய்ய முடியாமல் கடந்த சில ஆண்டுகளாக தரிசு நிலங்களாக கிடப்பதை எண்ணி அந்த பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி பாசன வாய்க்காலை தூர்வாரி தர வேண்டும் என்று அந்த பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.