அழிவின் விளிம்பில் நிற்கும் அனுப்பர்பாளையம் பாத்திர தொழில்


அழிவின் விளிம்பில் நிற்கும்   அனுப்பர்பாளையம் பாத்திர தொழில்
x

அழிவின் விளிம்பில் நிற்கும் அனுப்பர்பாளையம் பாத்திர தொழில்

திருப்பூர்

அனுப்பர்பாளையம்,

தீபாவளி ஆர்டர்கள் இல்லாததால் பாத்திர உற்பத்தியாளர்கள் பெருத்த ஏமாற்றமடைந்துள்ளனர்.

அனுப்பர்பாளையம் பாத்திரம்

அனுப்பர்பாளையம் பாத்திர தொழில் அழிவின் விளிம்பில் நிற்பதாலும், பாத்திரங்கள் தேங்கி இருப்பதாலும் பட்டறை உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

திருப்பூர் பின்னலாடை தொழிலுக்கு அடுத்தபடியாக பாத்திர தயாரிப்பு தொழில் பிரதான தொழிலாக உள்ளது. மேலும் திருப்பூரின் பழமையான தொழிலாகவும், பல தலைமுறைகளை கடந்த தொழிலாகவும் பாத்திர தொழில் விளங்கி வருகிறது. திருப்பூரில் அனுப்பர்பாளையம், ஆத்துப்பாளையம், திலகர்நகர், தண்ணீர்பந்தல், அம்மாபாளையம், திருமுருகன்பூண்டி உள்பட சுற்று வட்டாரத்தில் 300-க்கும் மேற்பட்ட பாத்திர பட்டறைகள் உள்ளன. இங்கு தயார் செய்யப்படும் எவர்சில்வர், பித்தளை, செம்பு உள்ளிட்ட பாத்திர வகைகள் அண்டை மாவட்டங்களான கோவை, ஈரோடு, சேலம், கரூர் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் அனுப்பப்படுகிறது.

நலிவடையும் தொழில்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை கொடிகட்டி பறந்த பாத்திர தொழில், தற்போது ஜி.எஸ்.டி., கொரோனா, மூலப்பொருட்கள் விலை உயர்வு, பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாளுக்கு நாள் நலிவடைந்து வருவதுடன், அழிவின் விளிம்பில் நிற்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு 3 மாதங்களுக்கு முன்பாகவே பாத்திர பட்டறைகளில் வேலை களை கட்ட தொடங்கி விடும்.

ஆனால் தீபாவளிக்கு இன்னும் 10 நாட்கள் கூட இல்லாத நிலையில் தீபாவளி ஆர்டர்கள் 10 சதவீதம் கூட இல்லாததால், பாத்திர உற்பத்தியாளர்களும், பாத்திர கடை உரிமையாளர்களும் பெருத்த ஏமாற்றத்தில் உள்ளனர். மேலும் ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்ட பாத்திரங்கள் வெளியே அனுப்பப்படாமல் அதிக அளவில் தேங்கி இருப்பதால் பாத்திர பட்டறை உரிமையாளர்கள் கவலையடைந்து உள்ளனர்.

ஆர்டர் நின்றுவிட்டது

இதுகுறித்து அனுப்பர்பாளையத்தை சேர்ந்த பாத்திர பட்டறை உரிமையாளர் திவாகர் கூறியதாவது:- கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை தீபாவளி பண்டிகையையொட்டி பலகார சீட்டு, பண்டு சீட்டுக்காக ஏராளமான பாத்திர ஆர்டர்கள் வரும். ஆனால் 3 ஆண்டுகள் கொரோனா பாதிப்பு இருந்ததால் அதன் பின்பு அந்த வகையான பாத்திர ஆர்டர்கள் முற்றிலுமாக நின்று விட்டது. மேலும் தற்போது பொதுமக்களிடம் பணப்புழக்கம் சுத்தமாக இல்லாததால் வாங்கும் திறன் குறைந்து விட்டது. இதுவும் தீபாவளி பாத்திர ஆர்டர்கள் இல்லாததற்கு முக்கிய காரணமாகும். இதேபோல் பாத்திர உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளாள பித்தளை தகடு கடந்த ஆண்டு 1 கிலோ ரூ.380-க்கு இருந்தது தற்போது ரூ.480 ஆக உயர்ந்துள்ளது.

இதுபோன்ற பல்வேறு பிரச்சினைகளால் தொழிலாளர்களுக்கு சம்பளம், தீபாவளி போனஸ் கொடுப்பதே பெரும் சிரமமாக உள்ளது. பெரிய அளவில் வேலை இல்லாவிட்டாலும் பண்டிகை காலங்களில் வேலை இல்லை என்று அனுப்பாமல் குடும்ப செலவுக்கு மட்டுமாவது பயன்படும் வகையில் இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே தொழிலாளர்களுக்கு வேலையை வழங்கி வருகிறோம். தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் அதிகாலை 5 மணி முதல் இரவு வரை பணிகள் நடைபெறும். ஆனால் தற்போது 8 மணி நேரம் கூட முழுமையாக வேலை நடைபெறுவது இல்லை.

அழிவின் விளிம்பில்

இந்த ஆண்டு தீபாவளிக்கு பித்தளை பாத்திர ஆர்டர்கள் வெறும் 10 சதவீதமும், எவர்சில்வர், செம்பு ஆகியவை 30 சதவீதம் மட்டுமே வந்துள்ளது. இதேபோல் ஏற்கனவே தயாரித்து பட்டறைகளில் வைக்கப்பட்டுள்ள பாத்திரங்கள் அனுப்பப்படாமல் அதிக அளவில் தேங்கி இருப்பதால் எங்களுக்கு நஷ்டமாக அமையும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

திருப்பூரில் பல தலைமுறைகளை கடந்த பாத்திர தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்து, அழிவின் விளிம்பில் இருப்பதை கருத்தில் கொண்டு, பாத்திர தொழிலை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்று அனுப்பர்பாளையம் சுற்று வட்டாரத்தில் உள்ள ஒட்டுமொத்த பாத்திர பட்டறை உரிமையாளர்கள், பாத்திர கடை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




Next Story