அமைச்சர் செந்தில்பாலாஜி உதவியாளர் வீடு உள்பட 4 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
கரூரில் 2-வது முறையாக அமைச்சர் செந்தில்பாலாஜி உதவியாளர் வீடு உள்பட 4 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அமைச்சர் கைது
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக தற்போதைய அமைச்சர் செந்தில்பாலாஜி இருந்தார். அப்போது வேலை வாங்கி தருவதாக கூறி லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஜூன் மாதம் 13-ந்தேதி சென்னை, கரூரில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அந்த சோதனையின் முடிவில் நள்ளிரவில் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டதால் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
2-வது முறையாக சோதனை
இந்நிலையில் நேற்று கரூரில் 2-வது முறையாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தினர். அப்போது அம்பாள் நகரில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி உதவியாளர் சங்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை 9 மணி முதல் சோதனை மேற்கொண்டனர். இதனைத்தொடர்ந்து செங்குந்தபுரத்தில் உள்ள சங்கரின் பைனான்ஸ் அலுவலகம், சின்னாண்டாங்கோவில் பகுதியில் உள்ள தனலட்சுமி மார்பிள்ஸ் கடை உரிமையாளர் பிரகாஷ் வீடு, அவரது மார்பிள்ஸ் கடை உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இதனையொட்டி கார்களில் வந்த 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் 4 இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது துப்பாக்கி ஏந்திய 20-க்கும் மேற்பட்ட மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சோதனை நேற்று இரவிலும் நீடித்தது. சோதனையில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. கரூரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.