என்ஜினீயர்-தாய் பலி


என்ஜினீயர்-தாய் பலி
x

தஞ்சை அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பாபநாசத்தை சேர்ந்த என்ஜினீயரும், அவரது தாயாரும் பலியானார்கள். இந்த விபத்தில் 8 மாத குழந்தை உள்பட 5 பேர் காயம் அடைந்தனர்.

தஞ்சாவூர்

அம்மாப்பேட்டை; தஞ்சை அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பாபநாசத்தை சேர்ந்த என்ஜினீயரும், அவரது தாயாரும் பலியானார்கள். இந்த விபத்தில் 8 மாத குழந்தை உள்பட 5 பேர் காயம் அடைந்தனர்.

என்ஜினீயர்

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை அடுத்த வங்காரம்பேட்டை கீழ செங்குந்தர் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 50). என்ஜினீயரான இவர், கட்டிடங்களை காண்டிராக்ட் எடுத்து கட்டிக்கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.இவர் தனது தாயார் வசந்தா(70) மற்றும் தங்கை ராணி ஆகியோருடன் காரில் தஞ்சையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு செல்வதற்காக பாபநாசத்தில் இருந்து தஞ்சையை நோக்கி சென்று கொண்டு இருந்தார். காரை அவரே ஓட்டி சென்றார்.

கார்கள் நேருக்கு நேர் மோதல்

தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையில் தஞ்சையை அடுத்த புலவர்நத்தத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே இவரது கார் சென்று கொண்டு இருந்தது.அப்போது எதிரில் திருச்சி துவாக்குடி என்.ஐ.டி.யில் பேராசிரியராக பணிபுரிந்து வரும் கிருபாகரன் தனது மனைவி வரலெட்சுமி, தாயார் யசோதா மற்றும் 8 மாத குழந்தையுடன் திருக்கருகாவூரில் உள்ள கர்ப்பரட்சாம்பிகை கோவிலுக்கு செல்வதற்காக திருச்சியில் இருந்து சாலியமங்கலம் நோக்கி வந்து கொண்டு இருந்தார்.இந்த காரை துவாக்குடியை சேர்ந்த டிரைவர் விஜயேந்திரன் ஓட்டி வந்தார். அப்போது இரண்டு கார்களும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக்கொண்டன.

என்ஜினீயர், தாயாருடன் பலி

இந்த விபத்தில் காருக்குள் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே என்ஜினீயர் செந்தில்குமார், அவரது தாயார் வசந்தா இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும் இந்த விபத்தில் கிருபாகரன் மற்றும் அவரது மனைவி வரலெட்சுமி, 8 மாத குழந்தை ஸ்மிருதி, தாயார் யசோதா, செந்தில்குமாரின் தங்கை ராணி, கிருபாகரனின் கார் டிரைவர் விஜயேந்திரன் ஆகியோர் காயம் அடைந்தனர்.

ஆஸ்பத்திரியில் அனுமதி

கிருபாகரன் குடும்பத்தினர் அனைவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.செந்தில்குமாரின் தங்கை ராணி தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

போலீசார் விசாரணை

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலியான செந்தில்குமார், வசந்தா ஆகிய இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விபத்து குறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story