வேலை கிடைக்காத விரக்தி:கஞ்சா விற்ற என்ஜினீயர் கைதுபீடா வியாபாரியிடம் 70 கிலோ போதை பொருள் பறிமுதல்


வேலை கிடைக்காத விரக்தி:கஞ்சா விற்ற என்ஜினீயர் கைதுபீடா வியாபாரியிடம் 70 கிலோ போதை பொருள் பறிமுதல்
x
தினத்தந்தி 26 Dec 2022 12:15 AM IST (Updated: 26 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

வேலை கிடைக்காத விரக்தியில் கஞ்சா விற்ற என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர். மேலும் பீடா வியாபாரியிடம் 70 கிலோ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

விழுப்புரம்


வானூர்,

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம், ஆரோவில் பகுதிகளில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து கஞ்சா, குட்கா விற்பனை செய்யப்படுகிறது. இதை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் ஆரோவில், கோட்டக்குப்பம் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

கோட்டக்குப்பம் அருகே பெரியமுதலியார் சாவடி மாரியம்மன் தெருவில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர்.

என்ஜினீயர் கைது

இதில் அங்கு பதுக்கி வைத்திருந்த 470 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ரோஷன் (வயது 22) என்பவரை போலீசார் கைது செய்தனர். என்ஜினீயரிங் பட்டதாரியான அவர் படித்த படிப்புக்கு பல இடங்களில் வேலை தேடியும் சரியான வேலை கிடைக்கவில்லையாம். எனவே, வேலை கிடைக்காத விரக்தியில் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.

வியாபாரி கைது

இதேபோல் திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில், ஒடிசாவை சேர்ந்த பீடா வியாபாரியான சத்தியபிரகாஷ் (52) என்பவரது வீட்டில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வீட்டில் பதுக்கி வைத்திருந்த குட்கா, புகையிலை உள்ளிட்ட 70 கிலோ போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தனிப்படை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் போதை பொருளின் மதிப்பு ரூ.2½ லட்சம் ஆகும்.


Next Story