ஒட்டன்சத்திரம் அருகே ரெயில் மோதி என்ஜினீயர் பலி
ஒட்டன்சத்திரம் அருகே ரெயில் மோதி என்ஜினீயர் பலியானார்.
ஒட்டன்சத்திரத்தை அடுத்த அக்கரைப்பட்டி ரெயில்நிலையம் அருகே தண்டவாளத்தில் உடல் துண்டான நிலையில் நேற்று வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த பழனி ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் தண்டவாளத்தில் கிடந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அரண்மனைபுதூரை சேர்ந்த என்ஜினீயரான மணிபிரகாஷ் (வயது 29) என்பதும், நேற்று முன்தினம் இரவு இவர், அக்கரைப்பட்டியில் மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு தண்டவாள பகுதியில் இருந்தபோது நெல்லையில் இருந்து மேட்டுப்பாளையம் சென்ற ரெயில் மோதியதில் உடல் துண்டாகி இறந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.