என்ஜினீயர், எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை


என்ஜினீயர், எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை
x

என்ஜினீயர், எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர்

கரூர் மாவட்டம், குளித்தலை சிதம்பரனார் தெருவை சேர்ந்தவர் பழனியாண்டி மகன் சிவக்குமார் (வயது 29). இவரது பெற்றோர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட காரணத்தால், இவர் குளித்தலை சிதம்பரனார் தெருவில் உள்ள அவரது உறவினர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

பொறியியல் பட்டப்படிப்பு முடித்த இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த 6 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் இவர் கடந்த 9-ந் தேதி பெங்களூருவில் இருந்து குளித்தலையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். இவருக்கு அவரது உறவினர்கள் திருமண செய்து வைக்க ஏற்பாடு செய்து வந்துள்ளனர். ஆனால் சிவக்குமார் தனக்கு திருமணம் வேண்டாம் என்று கூறிவந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் மாடியில் உள்ள அறையில் சிவக்குமார் தூங்கச்சென்றுள்ளார். இதையடுத்து நேற்று காலை அவரது உறவினர்கள் மாடிக்கு சென்று பார்த்தபோது, சிவக்குமார் மின்விசிறியில் தூக்கிட்டு இறந்த நிலையில் தொங்கிக் கொண்டு இருந்துள்ளார். இதுகுறித்து அவரது உறவினர்கள் குளித்தலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிவக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிவக்குமார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் கரூர் மண்மங்கலம் அருகே உள்ள வேலுச்சாமிபுரத்தை சேர்ந்தவர் விஜயேந்திரன்(42). எலக்ட்ரீசியனான இவருக்கு திருமணமாகி சுதா என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில் விஜயேந்திரனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இதனால் கடந்த 10 ஆண்டுகளாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த விஜயேந்திரன் வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஜயேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story