மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த என்ஜினீயர் சாவு
தக்கலை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த என்ஜினீயர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
தக்கலை,
தக்கலை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த என்ஜினீயர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
என்ஜினீயர்
தக்கலை அருகே உள்ள கோடியூர் கொல்லன்காடுவெட்டி விளையை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 53). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு அனிதா (49) என்ற மனைவியும், அனுராஜ் (25) என்ற மகனும், ஒரு மகளும் இருந்தனர். அனுராஜ் சிவில் என்ஜினீரியங் படித்து விட்டு வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் கடந்த மாதம் 23-ந் தேதி இரவு தனது தாயார் அனிதாவிடம் கிறிஸ்துமஸ் பண்டிகை தொடர்பாக நண்பர்களை பார்க்க செல்வதாக கூறி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
விபத்தில் தலையில் காயம்
மறுநாள் அதிகாலையில் அனுராஜ் காட்டாத்துறையில் உள்ள ஒரு ஆலயம் அருகில் சென்ற போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியது. இதனால் மோட்டார் சைக்கிளுடன் கீேழ விழுந்த அனுராஜிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
விழுந்த வேகத்தில் அவர் உயிருக்கு போராடினார். பிறகு அவர் மயக்க நிலைக்கு சென்று விட்டார். உடனே அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அவரை மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே வாலிபர் சுயநினைவை இழந்தார்.
மேலும் இதுதொடர்பாக தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
சிகிச்சை பலனின்றி சாவு
விபத்து பற்றி தகவல் அறிந்த அனுராஜின் தந்தை பால்ராஜ் வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பி தனது மகனை ஆஸ்பத்திரியில் இருந்தநிலையில் கவனித்து வந்தார்.
எப்படியாவது மகன் உயிர் பிழைத்து விட மாட்டானா? என பால்ராஜ் நம்பிக்கையில் இருந்தார். ஆனால் அனுராஜ் 3-ந் தேதி அன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனை கேட்டு பால்ராஜ் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.
இதனையடுத்து அனுராஜ் உடலுக்கு திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை நடந்தது. தொடர்ந்து அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பிறகு ஆம்புலன்ஸ் மூலம் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு நேற்று உடல் அடக்கம் செய்யப்பட்டது. விபத்தில் இறந்த என்ஜினீயருக்கு இன்னும் திருமணமாகவில்லை. திருமணம் செய்வதற்காக பெண் பார்த்து வந்த நிலையில் அனுராஜ் விபத்தில் இறந்ததாக போலீசார் தெரிவித்தனர்.