ஸ்கூட்டரில் தாயுடன், என்ஜினீயர் 61 ஆயிரம் கி.மீ. ஆன்மிக பயணம் 'தாயில்லாமல் நானில்லை' என்ற பாடல் வரிகளை மெய்ப்பிக்கும் கர்நாடக என்ஜினீயர்


ஸ்கூட்டரில் தாயுடன், என்ஜினீயர் 61 ஆயிரம் கி.மீ. ஆன்மிக பயணம்   தாயில்லாமல் நானில்லை என்ற பாடல் வரிகளை மெய்ப்பிக்கும் கர்நாடக என்ஜினீயர்
x

‘தாயில்லாமல் நானில்லை’ என்ற பாடல் வரிகளை மெய்ப்பிக்கும் வகையில் என்ஜினீயர் ஒருவர் ஸ்கூட்டரில் தாயுடன் 61 ஆயிரம் கி.மீ. ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ளார்.

தஞ்சாவூர்

'தாயில்லாமல் நானில்லை' என்ற பாடல் வரிகளை மெய்ப்பிக்கும் வகையில் என்ஜினீயர் ஒருவர் ஸ்கூட்டரில் தாயுடன் 61 ஆயிரம் கி.மீ. ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ளார்.

என்ஜினீயரின் பெற்றோர் பாசம்

கர்நாடக மாநிலம் மைசூரு அருகே உள்ள போகாதி பகுதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவருடைய மனைவி ரத்தினம்மா (வயது 74). இவர்களுடைய ஒரே மகன் கிருஷ்ணகுமார் (45). திருமணமாகவில்லை. பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.

ஒரே மகன் என்பதால் கிருஷ்ணகுமார் மீது அவருடைய பெற்றோர் அதிக பாசம் காட்டி வளர்த்தனர். அதே நேரத்தில் கிருஷ்ணகுமாரும் தனது பெற்றோர்கள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். இந்த நிலையில் கிருஷ்ணகுமாரின் தந்தை தட்சிணாமூர்த்தி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

ஆன்மிக பயணம்

கணவர் இறந்ததால் ரத்தினம்மா, வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிலேயே சோகத்துடன் வாழ்ந்து வந்தார். தாய் ரத்தினமா மீது உள்ள பாசத்தின் காரணமாக கிருஷ்ணாகுமார் தாய்க்கு வேண்டிய பணிவிடைகளை பரிவுடன் செய்து வந்தார்.

மேலும் தாயின் விருப்பப்படி அருகில் உள்ள கோவில்களுக்கு அழைத்துச்சென்று வந்தார். தாயை கவனிக்க வேண்டிய பொறுப்பு இருந்ததால் கடந்த 2018-ம் ஆண்டு தனது வேலையை ராஜினாமா செய்த கிருஷ்ணகுமார், தன் தந்தை வாங்கி வைத்திருந்த ஸ்கூட்டர் மூலம் கர்நாடக மாநிலத்தில் உள்ள பல்வேறு கோவில்களுக்கு தாயை அழைத்துச்சென்று வழிபாடு நடத்தினார். இதில் தாய்க்கு அதிக அளவு மகிழ்ச்சி ஏற்படவே தனது ஆன்மிக பயணத்தை மேலும் பல மாநிலங்களுக்கு விரிவுபடுத்த திட்டமிட்டார். அதன்படி ஆந்திரா, மராட்டியம், கோவா, புதுவை, தமிழகம், சத்தீஸ்கர் என இந்தியா முழுவதும் நூற்றுக்கணக்கான கோவில்களிலுக்கு அழைத்துச்சென்று வழிபாடு செய்தார்.

கும்பகோணத்தில் வரவேற்பு

நேற்று முன்தினம் தனது தாயுடன் கும்பகோணம் வந்த கிருஷ்ணகுமார், சிவன், பெருமாள் கோவில்களில் வழிபட்டார். அதனை தொடர்ந்து கும்பகோணம் விஜேந்திர சாமி மடத்திற்கு நேற்று மாலை வந்து வழிபாடு நடத்திய கிருஷ்ணகுமார் மற்றும் அவருடைய தாயார் ரத்தினமா ஆகியோரை மடத்தின் பொறுப்பாளர் பாலாஜி மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர். இதனைத்தொடர்ந்து நிருபர்களிடம் கிருஷ்ணகுமார் கூறியதாவது:-

உலகில் தாயில் சிறந்தது ஒரு கோவிலும் இல்லை. நமது முதல் தெய்வம் தாய் தான். எனது தாய் ரத்தினம்மாவை என்னிடம் உள்ள பழைய ஸ்கூட்டரில் பின்னால் உட்கார வைத்து 61 ஆயிரம் கிலோமீட்டர் ஆன்மிக பயணம் மேற்கொண்டேன். என் வாழ்வில் இதை விட பெரிய மகிழ்ச்சி எனக்கு கிடையாது.

மகனின் கடமை

நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனது தாய்க்காக பல லட்சம் ஊதியம் கிடைத்த வேலையை கூட விட்டு விட்டேன். ஒரு தாய் ஆரோக்கியமாக நல்ல முறையில் இருக்கும் போது நாம் அவரது எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும். இது ஒவ்வொரு மகனின் கடமை.

நான் சிவாஜி, எம்.ஜி.ஆர். உள்ளிட்ட தமிழ் நடிகர்களின் படங்களை அதிகமாக பார்ப்பேன். இவர்கள் 2 பேரும் சினிமாவில் தாய் பாசத்தை சிறந்த முறையில் விளக்கி கூறுவார்கள். இந்த காட்சிகளால் எனக்கு தாய் மீதான பாசம் மேலும் அதிகரித்தது.

மறக்க மாட்டேன்

மேலும் தமிழ் மொழியை இவர்களுடைய திரைப்படங்களை பார்த்ததன் மூலம் நன்றாக கற்றுக் கொண்டேன். அதோடு தஞ்சை மாவட்டக்காரர்கள் எனது ஆன்மிக பயணத்துக்கு அளித்த ஒத்துழைப்பை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன். ஒவ்வொரு ஆண்மகனும் தனது தாய்க்கு மகிழ்ச்சியை கொடுத்தால் அவன் வாழ்க்கை ஒளிமயமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

எம்.ஜி.ஆர். நடித்த அடிமைப்பெண் படத்தில் வரும் 'தாயில்லாமல் நானில்லை' என்ற பாடல் வரிகளை மெய்ப்பிக்கும் வகையில் தாயை கவனித்து வரும் என்ஜினீயரை பல்வேறு தரப்பினரும் மனம் நெகிழ்ந்து பாராட்டி வருகிறார்கள்.


Next Story