என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சாவு
காரியாபட்டி அருகே டிராக்டா் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் பரிதாபமாக இறந்தார். அண்ணன் படுகாயம் அடைந்தார்.
காரியாபட்டி,
காரியாபட்டி அருகே டிராக்டா் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் பரிதாபமாக இறந்தார். அண்ணன் படுகாயம் அடைந்தார்.
சகோதரர்கள்
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி தாலுகா அரிகேசவநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மாரி. இவரது மகன்கள் பரம ஸ்ரீ ஆகாஷ் (வயது 20), விக்னேஷ் (18). இவர்கள் 2 பேரும் காரியாபட்டி அருகே உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் மதுரையில் தங்கி தினமும் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்று வருவது வழக்கம்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் மதுரையில் இருந்து கல்லூரிக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது முன்னால் சென்ற டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.
மாணவர் பலி
இதில் பரமஸ்ரீ ஆகாஷ், விக்னேஷ் ஆகிய 2 பேரும் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த 2 பேரையும் மீட்டு காரியாபட்டி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர்களை மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
செல்லும் வழியில் விக்னேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். பரமஸ்ரீ ஆகாஷ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.