செல்போனில் வீடியோ கேம் விளையாடியதால் பாதிக்கப்பட்ட என்ஜினீயரிங் மாணவர்
செல்போனில் வீடியோ கேம் விளையாடியதால் பாதிக்கப்பட்ட என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் கை-கால்களை கட்டி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சென்னை,
ராணிபேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த காலிவாரி கண்டிகை பகுதியை சேர்ந்த 17 வயது வாலிபர், சென்னையில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் அடிக்கடி செல்போனில் வீடியோ கேம் விளையாடி வந்துள்ளார்.
இந்தநிலையில் சொந்த ஊருக்கு சென்றிருந்த நிலையில் இரவு, பகல் பார்க்காமல் இடைவிடாமல் செல்போன் மூலம் வீடியோ கேம் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அவர் உடலில் நேற்று திடீரென்று சில மாற்றங்கள் ஏற்பட்டது. விரல்கள் பாதிக்கப்பட்டது. எதையோ இழந்தது போன்று தாறுமாறாக வீட்டில் நடந்து கொண்டுள்ளார். அவரின் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றம் வீட்டில் இருந்த அனைவரிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நரம்புகள் பாதிப்பு
அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவரை அவரது உறவினர்கள் அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தனர். அவர் மேலும் பாதிக்கப்படாமல் இருக்க அவரது கை மற்றும் கால்களை கட்டி ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர்.
தற்போது அவருக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வீடியோ கேம் விளையாடியதால் அவரது கை மற்றும் உடலில் நரம்புகள் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் அரக்கோணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.