செறிவூட்டப்பட்ட அரிசி விழிப்புணர்வு முகாம்
மயிலாடுதுறையில் செறிவூட்டப்பட்ட அரிசி விழிப்புணர்வு முகாமை கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறையில் செறிவூட்டப்பட்ட அரிசி விழிப்புணர்வு முகாமை கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்தார்.
விழிப்புணர்வு முகாம்
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சார்பில் செறிவூட்டப்பட்ட அரிசியினை பொது மக்கள் பயன்படுத்தும் வகையில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. இந்த முகாமை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்து கூறியதாவது:
மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த பொது மக்கள் அனைவரும் செறிவூட்டப்பட்ட அரிசியை பயன்படுத்த வேண்டும். செறிவூட்டப்பட்ட அரிசியை பயன்படுத்துவதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. செறிவூட்டப்பட்ட அரிசி அதிக சத்துகள் கொண்டது.
ரத்த சோகையினை தடுக்கும்
செறிவூட்டப்பட்ட அரிசி ரத்த சோகையினை தடுக்கின்றது. இதில் உள்ள போலிக் அமிலம் கருவளர்ச்சிக்கும், ரத்த உற்பத்திக்கும் உதவுகிறது. வைட்டமின் பி-12, நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டிற்கு உதவுகிறது என்றார்.
முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாளவிநாயகன் அமல்ராஜ், மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் தமிழ்ஒளி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் நரேந்திரன் (பொது), ஜெயபால்(வேளாண்மை), மாவட்ட வழங்கல் அலுவலர் (பொறுப்பு) அம்பிகாபதி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் கண்மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.