வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு முகாம் ; கலெக்டர் ஆய்வு


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு முகாம் ; கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 14 Nov 2022 12:15 AM IST (Updated: 14 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் நேற்று நடந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாமை, கலெக்டர் செந்தில்ராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் நேற்று நடந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாமை, கலெக்டர் செந்தில்ராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வாக்காளர் பட்டியல்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து சுருக்க முறை திருத்த பணிகள் தொடங்கியது. அதன்பேரில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

இதற்கான சிறப்பு முகாம் நேற்று முன்தினமும், நேற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள 1919 வாக்குச்சாவடிகளில் நடந்தது. இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் போன்ற பணிகள் நடந்தன. நேற்று முன்தினம் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திரேஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த பணிகளை அமைச்சர் கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நேற்று முன்தினம் ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 5 ஆயிரத்து 649 பேரும், பெயர் நீக்கம் செய்ய 460 பேரும், திருத்தம் செய்ய 1,760 பேரும் ஆக மொத்தம் 7 ஆயிரத்து 860 பேர் மனுக்களை கொடுத்து உள்ளனர்.

ஆய்வு

நேற்று 2-வது நாளாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடந்தது. இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பெயர் சேர்ப்பு, திருத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக மனு கொடுத்தனர். அதே போன்று அரசியல் கட்சியினரும் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் அமர்ந்து பொதுமக்களுக்கு உதவிகளை செய்து வந்தனர்.இந்த பணிகளை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவர் தூத்துக்குடி லசால் மேல்நிலைப்பள்ளி, பாரத ரத்னா காமராஜர் மெட்ரிக்குலேசன் பள்ளி மற்றும் மாவட்டத்தில் பல இடங்களில் நடைபெற்ற பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆதார் எண் இணைப்பு

இந்த முகாமில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியும் நடந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை சுமார் 62 சதவீதம் பேர் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைத்து உள்ளனர். பெரும்பாலும் கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள் ஆதார் எண்ணை இணைத்து உள்ளனர். அதே நேரத்தில் நகர்ப்புறங்களில் குறைவான வாக்காளர்களே ஆதார் எண்ணை இணைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

தூத்துக்குடி தொகுதியில் இந்த பணிகள் மந்தமாகவே இருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை தூத்துக்குடி தொகுதியில் 40 சதவீதம் பேர் மட்டுமே ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் இந்த பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


Next Story