பள்ளி வளாகங்களில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்
பள்ளி வளாகங்களில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் என்று தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவுரை கூறினார்.
விழுப்புரம்:
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டுதலுக்காக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு அரசு, அரசு ஆதிதிராவிட நலம், நகராட்சி, அரசு நிதி உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு செயல்படும் விதம் குறித்தும், மாணவர்களை உயர்கல்வி வழிகாட்டுதலுக்கு தயார்படுத்துதல் குறித்தும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆர்.அறிவழகன் தலைமை தாங்கி பேசியதாவது:-
மாணவர்களின் பாதுகாப்பு
பள்ளியில் ஏதேனும் ஒரு துன்பம் நேர்ந்தாலும், மகிழ்ச்சி நடந்தாலும் அதற்கு முழு பொறுப்பு தலைமை ஆசிரியர்தான். மாணவர்களின் வாழ்வில் விளக்கேற்றி வைப்பதும் தலைமை ஆசிரியர்கள்தான். உங்கள் பள்ளி வளாகங்களை கோவில்போன்று நினைத்து சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும்.
காலையிலேயே சென்று வகுப்பறைகள், பள்ளி வளாகம் சுத்தமாக இருக்கிறதா, ஏதேனும் விஷ ஜந்துக்கள் இருக்கிறதா, எந்தவொரு குறைபாடும் இல்லை என்பதை உறுதி செய்துவிட்டு இருக்கையில் சென்று அமருங்கள். பள்ளி வளாகங்களில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள். இதில் எந்தவொரு குறைபாடும் ஏற்படக்கூடாது.
மரத்தடியில் அமர வைக்க வேண்டாம்
குடிநீர் வசதி, சுகாதாரமான சத்துணவு வழங்கப்படுகிறதா? கழிவறை சுகாதாரமாக இருக்கிறதா என்பதை உறுதி செய்யுங்கள். உங்கள் பள்ளிகளில் உபயோகமற்ற பர்னிச்சர் பொருட்களை அப்புறப்படுத்துங்கள், தேவைக்கு அதிகமாக இருந்தால் பக்கத்து பள்ளிகளுக்கு கொடுத்து உதவுங்கள். பள்ளியின் கட்டமைப்புகள் சரியான முறையில் இருக்குமாறு உருவாக்குங்கள். பள்ளி வளாகம் சுகாதாரமான முறையில் இருக்க வேண்டும். பள்ளி வளாகங்களிலும், மரத்தடி நிழலிலும் மாணவர்களை அமர வைத்து பாடம் நடத்துவதை விட்டு அலுவலக அறை, ஆசிரியர்களின் ஓய்வறைகளை வகுப்பறைகளாக தயார் செய்து அங்கு வைத்து பாடம் நடத்துங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலர்கள் சுப்பிரமணியம், மோகன், தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் செல்வராஜ், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் தனவேல், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் பெருமாள், செந்தில்குமார், பள்ளி துணை ஆய்வாளர்கள் காங்கேயன், வீரமணி, விநாயகமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.