கோவிலுக்குள் புகுந்து 2 உண்டியல்களை தூக்கி சென்ற மர்ம நபர்கள்


கோவிலுக்குள் புகுந்து 2 உண்டியல்களை  தூக்கி சென்ற மர்ம நபர்கள்
x

ஆம்பூர் அருகே கோவிலுக்குள் புகு்த மர்மநபர்கள் உண்டியலை பெயர்த்து தூக்கிச்சென்ற சம்பவம் அதி்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர்

ஆம்பூர் அருகே கோவிலுக்குள் புகு்த மர்மநபர்கள் உண்டியலை பெயர்த்து தூக்கிச்சென்ற சம்பவம் அதி்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பிரசித்தி பெற்ற கோவில்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த தேவலாபுரம் ஊராட்சியில் திருப்பதி கெங்கை அம்மன் கோவில் உள்ளது. மாவட்டத்திலேயே பட்டாசு திருவிழாவுக்கு மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்கும் இக்கோவிலில் முக்கிய விசேஷ நாட்கள் மற்றும் செவ்வாய், வெள்ளிக்கிழமையில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர்.

கோவிலில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் பூஜை நடக்கும். கோவில் வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவிலில் பூஜைகள் முடிந்தபின் வழக்கம்போல கோவிலை பூசாரி பூட்டிச் சென்றார். நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் அதிகாலையே கோவிலை திறக்க பூசாரி வந்தார்.

அப்போது கோவிலின் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது கோவிலில் இருந்த 2 உண்டியல்களை பெயர்த்து மர்மநபர்கள் தூக்கி சென்று இருப்பது தெரிந்து அதிர்ச்சியடைந்தார்.

ஒரு உண்டியல் பாலாற்றில் வீச்சு

இது குறித்து உடனடியாக கோவில் தர்மகர்த்தா ஈ.வெங்கடேசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் இது குறித்து உமராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொள்ளை சம்பவம் நடந்த கோவில் வளாகத்தை பார்வையிட்டனர். பின்னர் கோவில் வளாகத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்தபோது நள்ளிரவு நேரத்தில் 2 மர்ம நபர்கள் கோவிலில் சுவர் ஏறிக்குதித்து உள்ளே வந்து, கோவிலில் இருந்த 2 உண்டியலையும் தூக்கி கொண்டு கோவிலின் கதவை உடைத்து உண்டியலுடன் வெளியே வரும் காட்சி பதிவாகி இருந்தது.

அந்த வீடியோ காட்சியை வைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். மேலும் அருகில் உள்ள பாலாற்றில் போலீசாரும், பொதுமக்களும் தேடிப்பார்த்த போது ஒரு உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம் மற்றும் நகைகளை திருடிவிட்டு அதனை பாலாற்றில் வீசி சென்றதும் தெரியவந்தது. மற்ெறாரு உண்டியலை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர் சம்பவங்கள்

உண்டியலில் கொள்ளை போன பணம் மற்றும் நகையின் மதிப்பு தெரியவில்லை. இது குறித்து உமராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் உண்டியல்களை தூக்கி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பட்டப்பகலில் அம்மன் கழுத்தில் இருந்த தங்க செயினை ஒரு பெண் திருடி சென்று இருந்தார். தற்போது மர்ம நபர்கள் கோவில் உண்டியல்களை உடைத்து தூக்கி சென்ற சம்பவமும் அந்த காட்சி கண்காணிப்பு கேமராவில் வெளியாகி இருப்பதும் ஆம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் திருட்டு சம்பவங்கள் தொடர்கதையாக நடந்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story